வெளியிடப்பட்ட நேரம்: 01:10 (30/10/2018)

கடைசி தொடர்பு:01:10 (30/10/2018)

சட்டவிரோதமாக மின் கம்பங்கள் நடப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் - ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் காற்றாலைகளால்  சட்டத்துக்குப் புறம்பாக நடப்பட்ட மின் கம்பங்களை அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 50  என  ஆட்சியர் சந்தீப் நந்துாரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு, ஒட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில், தனியார் நிறுவனங்கள் மூலம் காற்றாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு பொதுமக்களிடம் பலமான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பல இடங்களில், காற்றாலை கோபுரங்கள் அமைக்கவும் மின் கம்பங்கள் அமைக்கவும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசுப் புறம்போக்கு மற்றும் மழை நீர் ஓடைகளையும் ஆக்கிரமித்து கம்பங்கள் நடப்படுகிறது என பொதுமக்கள் போலீஸாரிடம் புகார் தெரிவித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து  ஆட்சியர் அலுவலகத்தில்,  திங்கள் கிழமைதோறும் நடைபெறும், மக்கள் குறைதீர் கூட்ட நாளில் மனுக்கள் அளித்தும் வந்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்துாரி, ``தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, ஒட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் அரசுப் புறம்போக்கு  நிலங்கள், வடிகால் ஓடைகளில்  சட்டத்துக்குப் புறம்பாக நடப்பட்டுள்ள மின்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன.

அதே போல் பட்டா நிலங்களில் நில உரிமையாளர்களின் சம்மதம் இல்லாமல் நடப்பட்ட கம்பங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் 50 மின்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. அறிவிப்பின்படி, சம்பந்தப்பட்ட காற்றாலை நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து 15 மின்கம்பங்களை அகற்றியுள்ளனர். இது குறித்து வரும் புகார்கள் மீது வழக்குபதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பம் குறித்து விசாரிக்க காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே போல, தனியார் காற்றாலைகளையும் அழைத்து சட்டத்துக்குப் புறம்பாக நடப்பட்டுள்ள கம்பங்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. லாரிகள் செல்ல, ஓடைகளை ஆக்கிரமித்து உருவகப்பட்ட பாதைகளை அகற்றி, ஓடைகளை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டுவரவும், ஓடைகளில்  குழாய்கள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறி இது போன்று சட்ட விரோதமாக மின்கம்பங்கள் நடப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க