வெளியிடப்பட்ட நேரம்: 23:10 (29/10/2018)

கடைசி தொடர்பு:23:10 (29/10/2018)

இல்லாத துறையிலிருந்து விவசாயிகளுக்குப் போலி கடிதம்..! - குழப்பத்தில் தேனி கலெக்டர் அலுவலகம்

தேனி மாவட்ட விவசாயிகள் பலருக்கு ``மணல் அள்ளக் கூடாது, மீறினால் நிலம் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குள்ளப்பகவுண்டன் பட்டியைச் சேர்ந்த அரசு என்ற அந்த விவசாயி, ஆட்சித்தலைவரை சந்தித்து விளக்கம் பெற இன்று கலெக்டர் அலுவலகம் வந்திருந்தார்.

அவரிடம் பேசியபோது, ``கடந்த 25-ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதைப் பார்த்தபோது, அரசு அனுமதி இல்லாமல் பட்டா நிலங்களில் மணல் அள்ளி விற்பது குற்றம். மேலும், சம்பந்தப்பட்ட நிலத்தின் பட்டா ரத்து செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டபோது, எங்களுக்குத் தெரியவில்லை, இந்தக் கடிதத்தை நாங்கள் அனுப்பவில்லை எனக் கூறினார்கள். உடனே, கலெக்டர் அலுவலகம் வந்து இங்கிருக்கும் கனிமவள அதிகாரிகளிடம் பேசியபோது, அவர்களும் இந்தக் கடிதத்தை நாங்கள் அனுப்பவில்லை என்றார்கள். யார் தான் அனுப்பியது என்று தெரியவில்லை. எட்டு ஏக்கர் நிலம் வைத்திருக்கிறேன். அதில், மொச்சை, கடலை, தட்டைப்பயறு போன்ற பயிர்களை பயிர்செய்கிறேன். விவசாயி ஆகிய நான் எப்படி என் நிலத்தில் மண் அள்ளுவேன்?" என்றார். 

இது தொடர்பாகக் கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது, ``கலெக்டர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் கடித உறைதான் இந்தக் கடிதத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. கனிமவள கடத்தல் தடுப்புப் பிரிவு என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு துறையே இல்லை. பதிவுத்தபால் மூலம் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. இரண்டு ரூபாய் தபால் தலை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கலெக்டர் அலுவலகத்தில் ஒரு ரூபாய், நான்கு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் தபால் தலைகள்தான் பயன்படுத்துகிறோம். மேலும் ஒரு அரசுத் துறையின் கடிதம் போல அது இல்லை. மாவட்ட ஆட்சியருக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் அவப்பெயர் ஏற்படுத்தவே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. மொத்தம் 24 விவசாயிகளுக்குக் கடிதம் சென்றிருப்பதாகத் தெரிகிறது. புகார் கொடுக்கும் பட்சத்தில் விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். 

இதே போன்று கடிதம் பெற்ற கம்பம் பகுதியைச் சேர்ந்த திராட்சை விவசாயியும், பா.ம.க பிரமுகருமான பொன்.காட்சிக்கண்ணனிடம் பேசிய போது, "விவசாயிகளை மிரட்டவே இந்தக் கடிதம் திட்டமிட்டு அனுப்பப்பட்டிருக்கிறது. மணல் கொள்ளைக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் மாஃபியா யாரோதான் இந்தக் காரியத்தைச் செய்திருக்க வேண்டும். யார் இதைச் செய்தாலும் சரி, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்றார். போலிச் சான்றிதழ், போலி முத்திரைகள், போலி கையெழுத்துகள் என அரசுத்துறையில் நடக்கும் அவலங்களுக்கு மத்தியில், போலி கடிதம் அனுப்பும் போலி அதிகாரிகளும் முளைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?