வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (30/10/2018)

கடைசி தொடர்பு:03:00 (30/10/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - 20 அமைப்புகளிடம் விசாரணை நடத்திட சி.பி.ஐ முடிவு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட 20 அமைப்புகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்திட சி.பி.ஐ அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர். 

துப்பாக்கிச் சூடு

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த மே மாதம் 22-ம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்படப் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக தூத்துக்குடியில் உள்ள 4 காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், முக்கியமான 5 வழக்குகளை சிபிசிஐடி பிரிவு  போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். மீதமுள்ள 178 வழக்குகளை ஒரே வழக்காகப் பதிவுசெய்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில், சிபிசிஐடி விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது நீதிமன்றம். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி பிரிவு ஏ.டி.எஸ்.பி. மாரிராஜா தலைமையிலான குழுவினர் சிபிஐ-யிடம் ஒப்படைத்தனர். கடந்த 13-ம் தேதி முதல் சிபிஐ சிறப்புப் பிரிவு கண்காணிப்பாளர் சரவணன், துணைக் கண்காணிப்பாளர் ரவி தலைமையிலான குழுவினர் விசாரணையைத் தொடங்கினர். முதல் கட்டமாக வியாபாரிகள் சங்கம், வீராங்கனை அமைப்பு, மீனவர்கள் சங்கம் உள்ளிட்ட 20 அமைப்புகள்மீது 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து, சிபிசிஐடி போலீஸாரிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களைச் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரம் நடைபெற்ற இடங்களை ஆய்வுசெய்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர்கள், துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட தாசில்தார்கள், பணியில் இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக்காக தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில், சிபிஐ விசாரணைக்காகத் தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் அடுத்தகட்டமாக, இச்சம்பவம் தொடர்பாகவும் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாகவும் கருதப்படும்  வியாபாரிகள் சங்கம், வீராங்கனை அமைப்பு, மீனவர்கள் சங்கம் உள்ளிட்ட 20 அமைப்புகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களின் முக்கிய நிர்வாகிகள்குறித்த விவரங்களைச் சேகரித்து, அவர்களுக்கு சம்மன் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க