வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (30/10/2018)

கடைசி தொடர்பு:02:00 (30/10/2018)

ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீண்டும் சிறைப்பிடிப்பு!

ராமேஸ்வரத்தில் இருந்து இன்று காலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்ற சம்பவம், மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு.

இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட  ராமேஸ்வரம் மீனவர்கள் பலர், அண்டை மாநிலங்களுக்கு மீன்பிடிக் கூலிகளாகச் சென்றுவருகின்றனர். இந்நிலையில், எஞ்சியிருக்கும் சில நூறு ராமேஸ்வரம் மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவருகின்றனர். இன்று காலை, சுமார் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் பாக் நீரினைப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் பாரம்பர்யமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தங்கச்சிமடம் கிறிஸ்து என்பவருக்குச் சொந்தமான படகைச் சிறைப்பிடித்தனர்.  சிறைப்பிடிக்கப்பட்ட படகையும், அதில் இருந்த ராமபாண்டி, சேசு உள்ளிட்ட 7 மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு விசாரணைக்காகக் கொண்டுசென்றுள்ளனர்.

ஏற்கெனவே, இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 8 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தலா  60 லட்ச ரூபாய் அபராதத்துடன் 3 மாத சிறைத் தண்டனையும் விதித்துள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்பு எழுத்துள்ள நிலையில், இரு தினங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர். இன்று, ராமேஸ்வரம் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.   இலங்கை அரசியலில் ஸ்திரமற்ற நிலை உருவாகியுள்ள சூழலில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ''இலங்கையின் பிடியில் உள்ள படகுகளையும் மீனவர்களையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறியிருந்தார். இவ்வாறு அவர் கூறிச்சென்ற அடுத்த நாளே மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீண்டும் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டிருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.