வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (30/10/2018)

கடைசி தொடர்பு:07:32 (30/10/2018)

``விடுதியைக் காலி செய்யுங்கள்!’’ - தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு உத்தரவு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் விடுதி அறைகளைக் காலி செய்ய வேண்டும்  என உத்தரவிடப்பட்டுள்ளது. 


தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ க்கள் 

``முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை" எனக் கூறி, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்  தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 19 பேர் தமிழக முன்னாள் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இதனால்,  ``அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம்" என்று அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்குப் பரிந்துரை செய்திருந்தார்.  அவர்களில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் தவிர, 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 18 பேரும் தினகரனுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தேர்தலைச் சந்திக்கலாமா அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாமா என்பது தொடர்பாக விவாதித்து வருகின்றனர்

இந்த நிலையில், தமிழகத்தில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் சேர்த்து 20 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏ பதவியை இழந்து முன்னாள் எம்.எல்.ஏ க்களான 18 பேரும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் விடுதி அறைகளை உடனே காலி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு  உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் உள்ள தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரின் அறைகளுக்கும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.