வெளியிடப்பட்ட நேரம்: 09:42 (23/04/2013)

கடைசி தொடர்பு:09:42 (23/04/2013)

காற்றலை உற்பத்தி துவங்கியது : மின் தடை குறையும்

கோவை: தமிழகத்தில் கோவை,நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலை உற்பத்தி துவங்கியிருப்பதால் அடுத்த 6 மாத காலத்திற்கு மின்வெட்டு நேரம் குறையும் என இந்திய காற்றாலைகள் சங்க தலைவர் கஸ்தூரிரங்கையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்னர் தினமும் 2 மணி நேரம் என துவங்கிய மின்வெட்டு இப்போது 16 மணி நேரம் வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த சிலமாதங்களாக சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் மின்வெட்டு கடுமையாக இருந்து வருகிறது.


இந்த ஆண்டு இறுதி வரை மின்வெட்டு பிரச்னை தொடரும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ள நிலையில், கடுமையான மின்வெட்டு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கும்,தொழில் முனைவோருக்கும் இடைக்கால தீர்வாக தற்போது காற்றாலை மின் உற்பத்தி கைகொடுக்க துவங்கியுள்ளது.

தற்போது துவங்கியுள்ள இந்த காற்றாலை மின் உற்பத்தி, படிப்படியான அதிகரித்து நாள்தோறும் 2500 முதல் 4000 மெகாவாட் வரை அதிகரிக்கும் எனவும் தொடர்ந்து 6 மாத காலத்திற்க்கு இந்த மின் உற்பத்தியானது நீடிக்கும்  என்றும், இதன் காரணமாக தற்போது நிலவும் மிக கடுமையான மின்வெட்டு குறையும் என்றும் இந்திய காற்றாலைகள் சங்கத்தலைவர் கஸ்தூரி ரங்கன் தெரிவித்தார்.

இது தொடர்பாக இந்திய காற்றாலைகள் சங்கத்தலைவர் கஸ்தூரி ரங்கன் கூறுகையில், “கோவை, திருப்பூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1500க்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகிறது. இதன் உற்பத்தி திறன் 7000 மெகாவாட். இதன் மூலம் சராசரியாக 4000 மெகாவாட் வரை மின் உற்பத்தி இருக்கும். அடுத்த 6 மாத காலத்திற்க்கு இந்த மின் உற்பத்தியானது நீடிக்கும். இதனால் தற்போது நிலவும் மிக கடுமையான மின்வெட்டு கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது. அதே வேளையில் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு தமிழக மின்வாரியம் வழங்க வேண்டிய தொகைகளை ஓப்பந்தப்படி மாத மாதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

தமிழகத்தின் ஓட்டு மொத்த மின்தேவை 11,500 மெகாவாட்டாக இருக்கும் சூழ்நிலையில் பற்றாக்குறையானது 4000 மெகாவாட் வரை இருந்து வருகிறது. இந்நிலையில் காற்றாலை மின் உற்பத்தி துவங்கியுள்ள நிலையில், தற்போது நிலவிவரும் 16 மணி நேரமின்வெட்டு 6 மாத காலத்திற்கு குறையும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது. இது தற்காலிக தீர்வு என்பதால், இந்த காலக்கட்டத்துக்குள்  நடைமுறையில் உள்ள மின் திட்டங்களை அரசு விரைவு படுத்த வேண்டியது அவசியம்.

- ச.ஜெ.ரவி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்