வெளியிடப்பட்ட நேரம்: 09:38 (30/10/2018)

கடைசி தொடர்பு:09:45 (30/10/2018)

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா - யாகசாலை பூஜையுடன் நவம்பர் 8-ல் தொடக்கம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வரும் நவம்பர் 8-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 13-ம் தேதி நடைபெறுகிறது. 

கந்த ஷஷ்டி விழா

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா வரும் நவம்பர் 8-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு  விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜையும், காலை 5.30 மணிக்கு சுவாமி ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலை புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 9 மணிக்கு உச்சிக்கால பூஜையும் மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் மற்ற கால பூஜைகள் வழக்கமான நேரத்திலும் நடைபெறுகிறது.

திருவிழாவின் 2-ம் நாளான 8-ம் தேதி முதல் 5-ம் நாளான 12-ம் தேதி  வரை  தினமும் அதிகாலை 3 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை தொடர்ந்து மற்ற காலங்களில் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறுகிறது. திருவிழாவின் 6-ம் நாளான 13-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபதரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை  நடைபெறுகிறது.

மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் 7-ம் நாளான 14-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று, 5 மணிக்கு அம்பாள் தபசுக்காட்சிக்கு புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். பக்தர்களின் வசதிக்காக திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க