வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (30/10/2018)

கடைசி தொடர்பு:11:40 (30/10/2018)

‘இளையராஜா இசைக்கல்லூரிக்காக பல்கலைக்கூடத்தை தாரை வார்ப்பதா?’- மக்கள் உரிமைக் கூட்டமைப்பு எதிர்ப்பு

புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தை இளையராஜாவுக்கு தாரை வார்க்கும் முயற்சிக்கு மக்கள் உரிமை கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இளையராஜா

கடந்த 22-ம் தேதி புதுச்சேரிக்கு வந்திருந்த இசைஞானி இளையராஜா முதல்வர் நாராயணசாமியை சந்தித்துவிட்டு அரியாங்குப்பத்தில் இருக்கும் பாரதியார் பல்கலைக் கூடத்தைப் பார்வையிட்டார். அதையடுத்து அவர் புதுச்சேரியில் இசைக்கல்லூரி தொடங்க இருப்பதாகவும், அதற்காகத்தான் முதல்வர் நாராயணசாமியை சந்தித்ததாகவும் தகவல் பரவியது. அதைத் தொடர்ந்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``புதுச்சேரி அரசின் நிறுவனமான பாரதியார் பல்கலைக் கூடத்தை இளையராஜா தொடங்க இருக்கும் இசைக் கல்லூரிக்குத் தாரை வார்க்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக் கூடத்தில் ஓவியம், சிற்பம் ஆகிய நுண்கலை, இசை, நடனம் ஆகியவைப் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிறுவனம் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (AICTE) அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் பயின்ற பலர் புகழ்பெற்ற கலைஞர்களாக விளங்கி வருகின்றனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா புதிதாக இசைக்கல்லூரி ஒன்றை புதுச்சேரியில் தொடங்க இருப்பதாகவும், அதற்குப் பாரதியார் பல்கலைக் கூடத்தைத் தாரை வார்க்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. மேலும், சென்ற வாரம் இளையராஜா நேரில் வந்து பாரதியார் பல்கலைக் கூடத்தைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார்.

நாராயணசாமி

பாரதியார் பல்கலைக்கூடம் 10.5 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கி வருகிறது. இதில் ஒரு சென்ட் அளவு நிலம் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டாலும்கூட அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் (AICTE) மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் அங்கீகாரங்கள் ரத்தாகும். அதனால், மாணவர்களின் படிப்பு செல்லாததாகி அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். பாரதியார் பல்கலைக்கூடம் பல்கலைக்கழக மானியக் குழுவின் 2 எஃப். 12 (பி) அந்தஸ்து (UGC 2f and 12b Status) பெற்றுள்ளது என்பதால், மத்திய அரசிடமிருந்து நிதியுதவிப் பெற முடியும். ஆனால், புதுச்சேரி அரசு அதற்கான எந்தவித முயற்சியும் செய்யவில்லை. புதுச்சேரி அரசு பாரதியார் பல்கலைக்கூடத்தையும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 10.5 ஏக்கர் நிலத்தையும் தனியாருக்குத் தாரை வார்ப்பது ஏற்புடையதல்ல. எனவே, பாரதியார் பல்கலைக்கூடத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சியைக் கைவிட்டு, போதிய நிதி ஒதுக்கீடு செய்து பல்கலைக்கூடம் மேலும் வளர்ச்சி அடைய உரிய நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்று கூறப்பட்டிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க