சீரகச் சம்பா அதிரசம்... திரிகடுகம் கடலை மிட்டாய்...சிறுதானியப் பலகாரத்தில் அசத்தும் இளைஞர்! | This youngster makes organic sweets

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (30/10/2018)

கடைசி தொடர்பு:10:48 (30/10/2018)

சீரகச் சம்பா அதிரசம்... திரிகடுகம் கடலை மிட்டாய்...சிறுதானியப் பலகாரத்தில் அசத்தும் இளைஞர்!

இன்றைய இளைய சமுதாயத்தில், இயற்கை வாழ்வியல், சிறுதானிய உணவு, பாரம்பர்ய உணவு என்ற சொல்லாடல்கள் அதிகம் அடிபட ஆரம்பித்திருக்கின்றன. அதற்குக் காரணம், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விதைத்த இயற்கை விழிப்புஉணர்வு விதைதான். லட்சம் லட்சமாக சம்பளம் தந்த ஐ.டி வேலைகளை, வெளிநாட்டு வேலைகளை உதறித் தள்ளிவிட்டு, `இயற்கை விவசாயம் செய்யப்போகிறேன்' என்று சேற்றில் பல இளைஞர்களும் இன்று கால் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் மேலப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார், நம்மாழ்வார் காட்டிய வழியில் இயற்கைமுறையில் நமது பாரம்பர்யச் சிறுதானியங்களில் பலகாரங்கள் செய்து, தமிழ்நாடு முழுக்க விற்பனை செய்துவருகிறார். தீபாவளிப் பண்டிகை நெருங்கிவருவதால், இயற்கைமுறையில் இவர் செய்யும் பலகாரங்களுக்கு ஏக கிராக்கி!சிறுதானியம்

``எனக்கு பூர்வீகம் மேலப்பட்டி. அப்பா, சிவகாசிக்கு இடம்பெயர்ந்து அங்க சேவு கடை வெச்சிருந்தார். அவர் தொழிலை எனக்கும் பழக்கியதால, +2க்கு மேல படிக்கலை. ரத்ததானம் மாதிரியான சமூகசேவை செய்றதுல எனக்கு அதிக ஆர்வம். நான் இதுவரைக்கும் 30 தடவைக்குமேல ரத்ததானம் பண்ணியிருக்கேன். அதனால, `ரத்ததானக் குழு'ங்கிற அமைப்பு ஒண்ணு ஆரம்பிச்சு, பலரையும் ரத்ததானம் செய்ய வெச்சேன். அப்புறம் `விதை இயக்கம்'னு ஒரு அமைப்பை ஆரம்பிச்சு விதைப்பந்துகளை வீசுறது, மரக்கன்று நடுறதுனு செயல்பட்டேன். அப்பதான், நம்மாழ்வார் ஐயாவோடு தொடர்பு கிடைச்சுச்சு. அவரோட கொள்கையில ஈடுபாடு அதிகமாகி, அவர்கிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டேன். அதுல முக்கியமானது `உணவே மருந்து'ங்கிற விஷயம்.

7 வருஷத்துக்கு முன்னாடி `அதையே தொழிலா செய்யலாம்'னு முடிவுபண்ணி, நாலைஞ்சு விவசாயிகளைச் சந்திச்சேன். `இயற்கை விவசாயம் செய்றோம். ஆனா, அதை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளா மாற்றி விற்கத் தெரியலை'னு அவங்க சொன்னாங்க. `நான் அதைச் செய்றேன்'னு அவங்களை சிறுதானியங்களை பயிரிட உற்சாகப்படுத்தினேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி `தேன்கனி பாரம்பர்ய அறுசுவையகம்'கிற பெயர்ல ஸ்வீட் கடையை ஆரம்பிச்சேன். புதுசா ஒண்ணும் செய்யலை. நம்ம தாத்தா-பாட்டி செஞ்சதைச் செஞ்சேன்.

நம்மாழ்வார்

சின்னப் பசங்க முதல் வயசானவங்க வரை எல்லாருக்கும் ஏற்றவகையில் பாரம்பர்ய குணம், சுவை, ஆரோக்கியம் மாறாத நஞ்சில்லா இனிப்புகளையும் பலகாரங்களையும் தயார்செஞ்சு, ஆரோக்கிய உணவுகளாக விற்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல வியாபாரம் பண்ண சிரமமா இருந்துச்சு. ஆனா, `இது உடம்புக்கு நல்லது. 100 சதவிகிதம் இயற்கையானது. 10 நாள்ல எல்லாமே கெட்டுப்போயிரும்'னு உண்மையைச் சொல்லி விற்பனை செஞ்சேன். அப்புறம் பிக்கப் ஆச்சு. அதுக்குக் காரணம் நம்மாழ்வார் ஐயா சொன்ன தாரகமந்திரம்தான். அவர் அடிக்கடி சொல்ற, `விவசாயி நெல் உற்பத்தி செஞ்சா நெல்லா விற்காம, முதலில் அரிசியா மாற்றி நேரடியா விற்கணும். அதுக்கப்புறம் அதை மாவாவும், அதோடு எண்ணெய் சேர்த்து முறுக்காவும், அதிரசமாவும் மாற்றி தானே நேரடியா சந்தைப்படுத்தணும்'னு அவர் சொன்னதை மனசுல வெச்சுக்கிட்டுச் செயல்பட்டேன்.

சிறுதானியம்

இந்தத் தேன்கனி இனிப்பு மற்றும் பலகாரக் கடையை எங்க குடும்பத்துல உள்ளவங்களோடு இணைஞ்சு பாரம்பர்யப் பலகாரக் கடையாக மாற்றிச் செய்றேன். அதோட, `சிற்பி வாழ்வியல் மையம்'ங்கிற ஒரு அமைப்பை நண்பர்களோடு சேர்ந்து உருவாக்கி, அது மூலமா இயற்கை உணவுகளை மதிப்புக்கூட்டும் பயிற்சிகளையும் வழங்கிவரும் பயிற்சியாளராவும் இருக்கேன். இயற்கைப் பலகாரங்களை மதிக்காத, வழக்கமான சந்தைமுறைக்கு மாறா, இயற்கை விவசாயிகளோடு இணைஞ்சு தேன்கனி உழவர் வாரச் சந்தையைத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமைகள்ல நடத்திட்டு வர்றேன். எனக்குள்ள இருந்த சக்திய உணர்ந்து, இயற்கை விவசாயக் கருத்தரங்கு, நாட்டு விதைக் கண்காட்சி, இயற்கை வாழ்வியல் பயிற்சி, மாடித்தோட்டப் பயிற்சி, உணவுத் திருவிழா, பாரம்பர்ய பொங்கல் திருவிழானு பல நிகழ்ச்சிகளை நடத்துறதுல ஆர்வமாச் செயல்படுறேன். இப்போ தமிழ்நாடு முழுக்க என் தயாரிப்புகள்தான் எல்லா இயற்கை உணவு அங்காடிகள்லயும் விற்பனைக்கு இருக்கு. நாங்களே மொத்தமா கொண்டுபோய் சென்னையிலயும் பெங்களூர்லயும் விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்துட்டிருக்கிறோம். `100 சதவிகிதம் மக்களுக்கு நல்ல உணவைத் தர்றோம்' என்ற திருப்தி எனக்கு இருக்கு.

பலகாரம்

நம்முடைய பாரம்பர்யப் பலகாரங்களை விற்கும் சில வியாபாரிங்க, கடையில ரொம்ப நாள் வெச்சிருந்து விற்கிறதாவும், லாபம் ஈட்டுறதுக்காக பாமாயில், தவிட்டு மற்றும் ரீபைண்ட் எண்ணெய்கள் பயன்படுத்தியும், சுவைக்காக வெள்ளை சீனி, வண்ணப்பொடி, சுவையூட்டி, அஜினமோட்டோனு சேர்த்து விற்பனை செய்றாங்க. ஆனா நாங்க, கல் செக்கில் தயாராகும் கடலை, தேங்காய் எண்ணெய்கள், கருப்பட்டி, பனைவெல்லம் பயன்படுத்தித்தான் பலகாரங்களைச் செய்றோம். அதனால, எங்களது பாரம்பர்ய கருந்தானியப் பலகாரங்களை தமிழகத்தின் பல இயற்கை ஆர்வலர்களும், இயற்கை அங்காடிகளும், பிறந்த நாள், திருமண சீர்வரிசைப் பலகாரங்கள், தீபாவளி பலகாரங்கள்னு பல விசேஷங்களுக்கும் வாங்க எங்ககிட்ட இயற்கை உணவு விரும்பிகள் பலரும் ஆர்டர் கொடுக்குறாங்க.

இப்போதைக்கு மாசம் 30,000 ரூபாய் வரை லாபம் கிடைக்குது. உலகம் முழுக்க நம்மாழ்வார் ஐயா காட்டிய வழியில், `உணவே மருந்து'ங்கிற இந்தத் தாரகமந்திரத்தைக் கொண்டுசேர்க்கிறதுதான் என் இலக்கு. தீபாவளி திருநாள்ல நரகாசுரனை ஒழித்த நம்பிக்கைபோல், மக்கள் தங்களோட உடம்புக்குக் கேடு தரக்கூடிய பொருள்களால் செய்யப்படும் இனிப்பு, கார வகைகளைத் துறந்துட்டு, இப்படிப் பாரம்பர்ய தானியங்களால் ஆன பலகாரங்களுக்கு மாறணும். 32 வயசாகிற எனக்கு, நம்மாழ்வார் ஐயா வழியில இன்னும் பயணிக்கவேண்டிய தூரம், இலக்குகள் அதிகமா இருக்கு" என்கிறார் மகிழ்ச்சியாக.

 இனிப்பு வகைகள் :

சிறுதானியம்

• நவதானிய கருப்பட்டி அல்வா

• கருப்பட்டி பூந்திலட்டு

• நாட்டு உளுந்து கருப்பட்டி ஜிலேபி

• நாட்டுக் கறுப்பு எள் உருண்டை

• நாட்டுக்கடலை உருண்டை

• பேரீட்சை லட்டு 

• திரிகடுகம் கடலைமிட்டாய்

• திரிகடுகம் மாப்பிள்ளைசம்பா அவல் பொரி மிட்டாய்

• நாட்டுப் பாசிப்பயறு உருண்டை

• நாட்டு உளுந்தம் பயறு உருண்டை 

• சீரகச் சம்பா அதிரசம்

 

கார வகைகள் :

சிறுதானிய பலகாரம்

• வரகு காரச்சேவு

• குதிரைவாலி சீவல்

• சாமை முறுக்குச் சேவு

• கேழ்வரகு காரப் பக்கடா

• மாப்பிள்ளை சம்பா அவல் காரப்பொரி

• கேழ்வரகு காரமிக்ஸர்

• சாமை காரமிக்ஸர்

 

உடனடி தோசைக் கலவை (Ready Mix) :

• நாட்டுக் கம்பங்கஞ்சி மாவுக் கலவை

• கேழ்வரகுக்கஞ்சி மாவுக் கலவை

• நாட்டுக்கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, வரகு, சாமை, சோளத் தோசை மாவு மற்றும் களி மாவுக்கலவைகள்

• நாட்டு உளுந்தங்களி மாவுக் கலவை

• வெந்தயக்களி மாவுக் கலவை

• நவதானிய நுண்ணூட்டச் சத்து மாவுக் கலவை

• பலதானிய அடைமாவுக் கலவை

• கொள்ளுக்கஞ்சி மாவுக் கலவை

 

வீட்டுக் கைப்பக்குத்தில் பொடி வகைகள் :

• குழம்பு கார மசாலப்பொடி

• சாம்பார் பொடி

• ஆட்டுக்கறி மசாலப்பொடி

• மூலிகைகள் கலந்த சீகைக்காய்ப் பொடி

• மூலிகைகள் கலந்த ஆண்/பெண் குளியல் பொடிகள்

• மூலிகைகள் கலந்த பூசுமஞ்சள் பொடி


டிரெண்டிங் @ விகடன்