வெளியிடப்பட்ட நேரம்: 10:18 (30/10/2018)

கடைசி தொடர்பு:12:00 (30/10/2018)

``சோறு, சாதம் எனும் சொல்லிலும் சாதி, இன அரசியல் இருக்கிறது!’' - அ.கா. பெருமாள்

சோறு சாதம் என்னும் சொல்லில் கூட சாதிய, இன அரசியல் உண்டு. காபி, டீ குடிப்பவரை இனம் காட்டுவது போன்றது இது. கஞ்சி என்ற சொல் வறுமைக் கோட்டின் நிலையைக் காட்டுவது. கஞ்சிக்கும் அலைந்த அடிமை என்பது பழைய ஆவணம்.

சமூக வலைதளங்களில், கடந்த வாரம் முக்கியமான டாப்பிக்காக இருந்தது `தோசை’. காரைக்குடியில் பகுத்தறிவாளர் கழகம் நடத்திய கூட்டத்தில் பெரியாரியப் பேச்சாளர், அரசியல் விமர்சகர் வே.மதிமாறன் பேசிய ``தோசை சுடும் முறை சாதிப் பின்புலத்துக்கு ஏற்றார்போல் மாறும். தோசையில் சாதி இருக்கு. பார்ப்பனர்கள் ரொம்ப வெரைட்டியாக தோசையைச் சுடுவாங்க. ஆதிக்கச்சாதியினரைப் பார்த்தீங்கன்னா ரொம்ப மெலிசா தோசை சுடுவாங்க" என்ற பேச்சு, வைரலானது. அவர் பேசியதை முன்னிட்டு சமூக வலைதளங்கள் முழுக்க மதிமாறனை கிண்டல் செய்தும், ஆதரித்தும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.  சமூகத்தில் உணவில் மட்டுமல்ல, உடை, வாழிடம் என எல்லாம் சார்ந்தும் சாதியம் இருக்கிறது என்றாலும் முற்போக்குச் சிந்தனையாளர் என்று கூறிக்கொண்டு அவர் இப்படிப் பேசியது பெரும்விமர்சனத்துக்குள்ளானது.

வெ.மதிமாறன்

உண்மையில் தமிழரின் உணவுப் பண்பாட்டில் காணப்படும் அரசியல்குறித்து, நாட்டார் வழக்காற்றியல் அறிஞர், பேராசிரியர் அ.கா.பெருமாளிடம் பேசினோம். ``தமிழரின் நாட்டார் கலைகள், வழக்காறுகள், சடங்குகள், விழாக்கள் வழிபாட்டுத் தெய்வங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவை பன்முகத்தன்மைகொண்டவை. இதுபோலவே உணவுப் பழக்கங்களில் உணவின் வகை, தரம், சேர்மானம், ருசி போன்றவற்றில் பன்முகத்தன்மை மட்டுமல்ல சாதிய, பொருளாதார ஏற்றதாழ்வும் உண்டு.  உணவின் ருசி, சேர்மானம், பயன்படுத்தும் அல்லது விலக்கும் பதார்த்தங்களின் அடிப்படையில் சாதியின் உயர்வு நிலையை அனுமானிக்கும் வழக்கம் மறைந்துவிடவில்லை.

பசியைப் போக்கவும் உடல்நலத்துக்காக உண்பதும் இன்று மாறிவிட்டன. ஆடம்பரம், உயர்வு மனப்பான்மை, விளம்பர மாயை, பொழுதுபோக்கு போன்ற காரணங்களால் பலவகை உணவுகளைச் சாப்பிடுவது சகஜமாகிவிட்டது. `உணவை வீணாக்கக் கூடாது' என்ற பண்பாட்டை உணர்த்தும் பழமொழிகளும் வழக்காறுகளும் நமக்கு நிறைய உண்டு.  ஆனால் இன்று, நிலையே வேறு.  இது பற்றிய சிந்தனை, பொதுபுத்தியில் உறைக்கவில்லை.

அ.கா.பெருமாள்

சோறு, சாதம் என்ற சொற்களில்கூட சாதிய, இன அரசியல் உண்டு.  காபி, டீ குடிப்பவரை இனம் காட்டுவது போன்றது இது. `சோறு' என்பது பழைய சொல்.  `கஞ்சி' என்ற சொல், வறுமைக்கோட்டின் நிலையைக் காட்டுவது.  `கஞ்சிக்கும் அலைந்த அடிமை' என்பது பழைய ஆவணம்.

பழைய தமிழகத்தின் உணவுமுறை பற்றிய செய்திகள், சங்கப் பாடல்களில் உள்ளன. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் `உணவு' என்ற சொல் வருகிறது.  உணா என்பதும் உணவைக் குறிப்பதுதான். உணவைக் குறிக்க வல்சி, உண்டி, ஓதனம், அசனம், பகதம், இசை, ஆகாரம், உறை, ஊட்டம், புகா, மிசை என்னும் சொற்கள் இருந்தன. இவற்றில் உள்ள நுட்பமான வேறுபாடுகளில் ருசி, விருப்பம், ஆரோக்கியம் தொடர்பானவையும் அடங்கும்.

சங்க நூல்களில் (பெரும்பாணாற்றுப்படை, அகநானூறு, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் போன்றவற்றில் கும்மாயம், மெல்லடை, அப்பம், பண்ணியம், அவல் போன்ற பலகாரங்கள் வருகின்றன. கி.பி.16-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கல்வெட்டுகளில் அதிரசம், பிட்டு, இடியாப்பம், சட்டினி, தோசை, சீடை போன்றவற்றின் பெயர்கள் உள்ளன. தமிழகத்தில் விஜயநகரப் பேரரசு தாக்கத்துக்குப் பிறகு பலவகை உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பெரும்பாலும் சடங்கு, வழிபாடு காரணமாகவே இவை நுழைந்திருக்கின்றன.

உணவு அரசியல்


தமிழன், ஆரம்பத்திலிருந்தே அசைவப் பிரியனாக இருக்கிறான். சங்ககாலத்தில் பறவை, விலங்குகள் எல்லாவற்றையும் உண்டான். போர் வீரர்கள், பெரும்பாலும் மாட்டிறைச்சியையே உண்டனர். சங்ககால இறுதியில் இதுபோன்ற வழக்கங்கள் அருகின. பக்தி இயக்க காலத்தில் ஆடு உரித்துத் தின்பது பாவமானது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது உணவுப் பண்பாட்டில் பெரும் மாற்றம் அமைந்திருந்தது. இந்தக் காலத்தில் உண்ணும் முறை, தயாரிப்பு யத்தினம் போன்றவற்றிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

தமிழ்ச் சமூகத்தில் உணவிலும் உணவைக் குறிக்கும் சொற்களிலும் சாதி தொடர்ந்து இருந்துகொண்டுதான் வருகிறது. அது உண்மைதான் என்றாலும், பகுத்தறிவு என்ற அடையாளத்தின் பின்னணியில் அவர் இவ்வாறு பேசியதே பெரிய விமர்சனத்துக்கும் கேலிக்கும் காரணமாகிவிட்டது.


டிரெண்டிங் @ விகடன்