வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (30/10/2018)

கடைசி தொடர்பு:10:40 (30/10/2018)

`பொய் சொல்பவர்களைக் களையெடுக்க வேண்டும்’ - ஆளும் கட்சியினரை விளாசும் கிரண் பேடி

“பொய் சொல்பவர்களை முன் கூட்டியே நாம் களை எடுக்க வேண்டும்” என்று ஆளும் கட்சியினரை ஆளுநர் கிரண் பேடி விமர்சித்திருக்கிறார்.

கிரண் பேடி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையேயான மோதல் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. கோப்புகளுக்கு அனுமதி தர மறுக்கிறார் என்ற நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு ``உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா?” என்று பகிரங்கமாக சவால் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் கிரண் பேடி. அதன் தொடர்ச்சியாக மீண்டும் தனது வாட்ஸ்அப் மூலம் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``புதுச்சேரியில் உண்மை கண்டறியும் பரிசோதனை தற்போது அவசரமாக தேவைப்படுகிறது.  புதுச்சேரியின் நிர்வாகியாக இருந்துகொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பொய்ப் பிரசாரங்களுக்குப் பதில் அளிப்பதிலேயே அதிக நேரத்தை செலவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முறைகேடுகளில் இருந்துதான் முதலில் தொடங்கியது என நினைக்கிறேன்.

அதில் அப்பட்டமான பொய்களைச் சொன்னவர்களைக் கண்டுபிடித்துவிட்டோம்.  அதற்குப் போதுமான சாட்சிகள் எங்களிடம் நிறைய இருக்கின்றன. அந்தத் தவறுகள் உச்ச நீதிமன்றம் வரை சென்று அதிக நேரம் மற்றும் பணத்தை செலவு செய்த பின்னர் அது சரி செய்யப்பட்டது. அது அனைவரும் சரி செய்யக்கூடிய விஷயம் இல்லை. பொய் சொல்பவர்களை நாம் முன்கூட்டியே களை எடுக்க வேண்டும். அது மக்கள் மனதில் வேரூன்ற வேண்டும். ஒரு நிர்வாகியாக நான்தான்  அதை வெளிக்கொண்டு வர முடியும். அதிர்ஷ்டவசமாக சாதாரண குடிமகனைவிட கூடுதல் செய்திகளைப் பெறும் இடத்தில் நான் இருக்கிறேன். எனவே, இதற்குப் பதில் சொல்வதைக் கடமையாக நினைக்கிறேன். இல்லையென்றால் பொய் சொல்பவர்களுக்கு நான் இடம் கொடுத்ததுபோல ஆகிவிடும். மேலும், அவைகள் தொடரவோ அல்லது அதிகரிக்கவோ வழி வகுத்துவிடும். அதேபோல ஏழைகளுக்காக வழங்கப்படும் இலவச அரிசிக்கான நிதியை வேறுகாரணங்களுக்காக மடை மாற்ற முயற்சி செய்கின்றனர். உண்மையான காரணத்தை மக்களிடம் தெரிவிக்காமல் ஏழைகளுக்கான அரிசியை ஆளுநர் மாளிகை கொடுக்க மறுப்பதாகக் குறை சொல்வார்கள். 

இலவச அரிசிக்கான கோப்பை திருப்பி அனுப்பும்போது அதைதுணை நிலை ஆளுநர் ஏன் திருப்பி அனுப்பினார் என்பதை மக்கள் பிரதிநிதிகள், மக்களிடம் விளக்கி இருக்க வேண்டும். ஏழைகளின் அரிசிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை வேறு பணிகளுக்காக மாற்றக்கூடாது என்பதில் ஆளுநர் மாளிகை உறுதியாக நிற்கிறது என்பதை மக்களுக்கு விளக்குவது யார். ஒரு பொய்யில் இருந்து அடுத்த பொய் சொல்வதற்குள் எவ்வளவோ பொய்யர்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றனர் என்பதைக் கண்கூட நான் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், அவர்களில் சிலரை நாம் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கிறோம். 

அதனால், தற்போது நடந்துகொண்டிருக்கும் சுரண்டல்களிலிருந்து மக்களவைப் பாதுகாக்க உண்மையைக் கண்டறியும் பரிசோதனை அவசரமாக தேவைப்படுகிறது. ஒருவர் மற்றொருவரை குற்றம் சாட்டும்போது குற்றம் சாட்டப்பட்டவர் பதில் அளிக்க வேண்டும். மக்கள் உண்மையைத் தெரிந்துகொள்வதற்கும், புதுச்சேரியில் தற்போது நடந்துகொண்டிருக்கும் சரிவை சீர் செய்வதற்கும் உதவும். பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக பொய் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுப்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது. பொய் சொல்வது யார்? தங்களை தவறாக வழிநடத்துவது யார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். குடியரசுத் தலைவர் அனுமதிக்கும்வரை வெளி மாநிலத்தில் இருந்து வந்திருக்கும் நான் புதுச்சேரி மக்களுக்கு சேவைசெய்துகொண்டிருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க