`சபரிமலையில் பெண்களுக்காக பிரத்யேக ஐயப்பன் கோயில்!’- சுரேஷ்கோபி எம்.பி. திட்டம் | An Ayyappa temple exclusively for women devotees- suresh Gopi

வெளியிடப்பட்ட நேரம்: 11:17 (30/10/2018)

கடைசி தொடர்பு:11:17 (30/10/2018)

`சபரிமலையில் பெண்களுக்காக பிரத்யேக ஐயப்பன் கோயில்!’- சுரேஷ்கோபி எம்.பி. திட்டம்

``சபரிமலை கோயில் அருகே யாராவது இடம் கொடுத்தால் பெண்கள் வழிபடுவதற்காக புதிய ஐயப்பன் கோயில் கட்டத் தயாராக இருக்கிறேன்'' என சுரேஷ்கோபி எம்.பி. கூறியிருக்கிறார்.

சுரேஷ்கோபி

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து பலவிதமாக கருத்துகள் எழுந்துள்ளன. ``மத நம்பிக்கையைக் காப்பாற்ற சாகும் வரை போராடுவோம்" என நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்கோபி ஏற்கெனவே கூறியிருந்தார். இந்த நிலையில், பெண்கள் வழிபட சபரிமலை அருகே புதிய கோயில் கட்டும் திட்டம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொளத்தூர் அத்வைதா ஆசிரமத்தில் ஸ்ரீ சங்கர வியக்த சேவா கேந்திரம் திறப்புவிழாவில் கலந்துகொண்ட சுரேஷ்கோபி பேசுகையில், ``சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் அருகே பெண்கள் மட்டும் வழிபடுவதற்காக புதிய கோயில் கட்டத் தயாராக இருக்கிறேன். காணிக்கைக்கான உண்டியல்கள் இல்லாத வகையில் புதிய கோயிலை அமைக்கும் திட்டம் என் மனதில் உள்ளது. இதற்கான விளம்பரம் விரைவில் வெளியாகும். மத்திய அரசோ, மாநில அரசோ இடம் ஒதுக்கித்தந்தால் உடனே கோயில் கட்டப்படும். அல்லது நல்லவர்கள் யாராவது சபரிமலையை ஒட்டியுள்ள பகுதியில் இடம் வழங்கினால் அங்கு கோயில் அமைக்கலாம். சபரிமலை அல்லது பத்தணம்திட்டா பகுதியை ஒட்டிய பகுதியில் புதிய கோயில் கட்டும் திட்டம் உள்ளது. புதிய கோயில் விக்கிரகம் நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யப்படும். இந்தக் கோயிலில் பெண் பூசாரியை நியமிப்பது குறித்தும் ஆலோசித்துவருகிறேன்" என்றார்.