காந்தியைக் கொன்றவர் 16 வருடங்களில் விடுதலை; ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர்களின் நிலை? | The killer of Gandhi was released in 16 years .. But seven innocent Tamils?

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (30/10/2018)

கடைசி தொடர்பு:15:13 (30/10/2018)

காந்தியைக் கொன்றவர் 16 வருடங்களில் விடுதலை; ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர்களின் நிலை?

``திருமுருகனை விடுதலை செய்' என்பதோடு உங்கள் குரல் நின்றால் அது நம் போராட்டத்துக்குச் செய்யப்படும் துரோகம். நிரபராதிகளான அந்த 7 தமிழர்களையும் விடுதலை செய்ய நாம் குரல் கொடுக்க வேண்டும்"

காந்தியைக் கொன்றவர் 16 வருடங்களில் விடுதலை; ராஜீவ் கொலை வழக்கில் 7  தமிழர்களின் நிலை?

மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளைப் போட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம், சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு உள்ளிட்ட தமிழக மக்களின் முக்கியப் பிரச்னைகளை ஐ.நா. சபையில் பேசியதற்காக நார்வேயிலிருந்து பெங்களூரு திரும்பிய திருமுருகன் காந்தியை பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்தனர். அவர்மீது 124(ஏ) தேசத்துரோக வழக்கு போடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி, பெரியார் சிலைக்கு மாலை போட்டது தொடர்பான வழக்குகளும் அவருக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்தன. இந்தநிலையில் கடும் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, அனைத்து வழக்குகளிலும் திருமுருகன் காந்திக்குப் பிணை வழங்கப்பட்டது. சிறையில் 55 நாள்களைக்  கழித்த அவர், அக்டோபர் 2-ம் தேதி வேலூர் சிறையிலிருந்து விடுதலையானார். 

மே 17 திருமுருகன் காந்தி

இந்த  நிலையில் தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாளையொட்டியும், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும்   தமிழர்கள் 7 பேரை விடுதலை செய்யக்கோரியும், மயிலாப்பூர் மாங்கொல்லையில் அக்டோபர் 28-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்த பின்னர் திருமுருகன் காந்தி பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். நாடி நரம்புகளைச் சிலிர்க்கவைக்கும் பறை இசையோடு உற்சாகத்துடன் தொடங்கியது அந்தக் கூட்டம். ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்தவர்களுக்கும், தமிழ்த் தேசிய அமைப்பைச் சேர்ந்த கி.த.பச்சையப்பனுக்கும் முதலில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, முதலில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி ஈக்வடார் நாட்டின் `சராயாகு' பழங்குடி இனத்தவர்வரை தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர், ``இந்த நன்றிப் பட்டியல் பொதுக்கூட்டம் முடியும்வரைகூட நீளலாம். இருப்பினும் இதை ஏன் படிக்கிறேன் என்றால் பி.ஜே.பி. எந்தளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் தமிழ்நாட்டில் நடைபெறும் பிரச்னைகளை மே 17 இயக்கம், எந்தளவுக்கு சர்வதேச தளத்தில் முன்னெடுத்துச் சென்று, மக்களுக்கு ஆதரவு திரட்டியிருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தவே இந்தப் பட்டியலை வாசித்தேன். 

ஒரு வகையில் சிலருக்கு மட்டுமே அறிமுகமாகியிருந்த பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டத்தையும், என்னையும் அடக்குமுறையின் மூலம் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த பி.ஜே.பி-க்கும் நான் நன்றி சொல்லியாக வேண்டும். தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் கடுமையான போராட்டத்தின் - தியாகத்தின் விளைவாக கிடைத்த இடஒதுக்கீட்டில் படித்தோம் என்பதைச் சொல்ல கர்வம் கொள்ளவேண்டும். பலர் இடஒதுக்கீட்டில் படித்ததைச் சொல்வதற்குக் கூச்சமடைகிறார்கள். அது தேவையில்லாதது. ஏனெனில், நமக்கு 70 வருடமாகத்தான் இடஒதுக்கீடு உள்ளது. ஆனால், ஆதிக்க சாதியினருக்கு 2,000 வருடங்களாக ரிசர்வேஷன் இருந்து வந்தது. அதனால்தான், அவர்கள் முன்னேறிய சமூகமாய் உள்ளனர். கல்வி, பொருள், உழைப்பு என எதுவுமே நமக்குச் சொந்தமில்லை. மனுதர்மத்தின் அடிப்படையில் எல்லாமே நடக்கிறது. அதனால்தான் பக்கத்து தெருவில் எஸ்.வி.சேகர் இருந்தாலும் அவரை போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை. உயர் நீதிமன்றத்தைத் தரக்குறைவாகப் பேசிய ஹெச்.ராஜாவைக் கைது செய்யமுடியவில்லை, காவல்துறையினரால்! `தவளையைக் கொல்வதும் சூத்திரனைக் கொல்வதும் ஒரே அளவு பாவம்தான்' என்று கூறுகிறது மனுதர்மம். 

திருமுருகன் காந்தி மே 17

இப்படியிருக்க, 7 தமிழர்களின் விடுதலை சாத்தியமா? தேசத் தந்தை மகாத்மா காந்தியைக் கொன்ற கோபால் கோட்ஸே 16 ஆண்டுகளில் சிறையிலிருந்து வெளியே வருகிறார். ஏனெனில், அவர் ஆதிக்கச்சாதியைச் சேர்ந்தவர். ஆனால், குற்றம் செய்யாத இந்தத் தமிழர்கள் 27 வருடங்களாகச் சிறையில் இருக்கின்றனர். இந்த வழக்கில் சாந்தன் எப்படி வந்தாரென்பது சொல்லிமாளாத துயரம்.

சாந்தன் என்றொருவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் காவல்துறையினர். அந்தச் சமயத்தில் இலங்கையிலிருந்து வந்த சாந்தன், வேறு விமானம் மாறுவதற்காகச் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். இவர்தான், ராஜீவ் கொலை வழக்கில் சி.பி.ஐ. தேடிக்கொண்டிருக்கிற சாந்தன் என்று பிடித்து அவரைச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள் 27 வருடமாக! இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது? இங்கே இருக்கும் சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் திருடிய, அபகரித்த பணத்தைச் சேர்த்தால் 500 கோடி ரூபாய்கூட தாண்டாது. ஆனால், இந்த 500 கோடி ரூபாய் திருடியவர்களை பிடிக்கத்தான் காவல்துறையும், சிறைச்சாலையும் உள்ளது. ஆனால், ஒருவர் மொத்தமாக 1,000 கோடி, 2000 கோடி ரூபாய் திருடினால் அவரை எதுவும் செய்யமாட்டார்கள். அதுவும் குஜராத் தொழிலதிபர் என்றால் விமானப் பயணச்சீட்டும் பரிசாக அளிப்பார்கள்.

திருமுருகன் காந்தி மே 17

நீதித்துறையில் இன்னும் மக்களின் சராசரி வாழ்க்கையையும் கஷ்டத்தையும் அறிந்த நீதிபதிகள் இருப்பதனால்தான் நான் இன்று விடுதலையாகி இருக்கிறேன். காஞ்சிபுரத்தில் பசிக்கு `பன்’ திருடியவரையெல்லாம் நீதிபதி முன் ஆஜர்படுத்திய சம்பவம் அரங்கேறியிருக்கிறது. `அவருக்குச் சாப்பாடு வாங்கிக்கொடுங்கள், இதையெல்லாம் வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது' என்று நீதிபதி கூறிவிட்டார். வெறும் 60 ருபாய் வழிப்பறி செய்தவர் மீது குண்டாஸ் சட்டம் போடுகிறார்கள். நிரபராதிகளான 7 தமிழர்களின் விடுதலை சாத்தியமாக வேண்டுமெனில், மக்கள் போராட்டத்தில் இணைய வேண்டும். அப்போதுதான் அது நடக்கும். `திருமுருகனை விடுதலை செய்' என்பதோடு உங்கள் குரல் நின்றால் அது நம் போராட்டத்துக்குச் செய்யப்படும் துரோகம். நிரபராதிகளான அந்த 7 தமிழர்களையும் விடுதலை செய்ய நாம் குரல் கொடுக்க வேண்டும்" என்றார். 


டிரெண்டிங் @ விகடன்