‘என் செயலுக்காக வருந்துகிறேன்’ - மன்னிப்புக் கேட்ட சிவக்குமார் | sivakumar apology for his action in public event

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (30/10/2018)

கடைசி தொடர்பு:13:10 (30/10/2018)

‘என் செயலுக்காக வருந்துகிறேன்’ - மன்னிப்புக் கேட்ட சிவக்குமார்

``ரசிகர் செல்போனை தட்டிவிட்டதுக்காக வருந்துகிறேன்'' என நடிகர் சிவக்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார். 

சிவகுமார்

மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவக்குமார், தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவரின் செல்போனைத் தட்டிவிட்டார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ரசிகரின் செல்போனை தட்டிவிட்டது தவறு அவர் அப்படி செய்திருக்கக்கூடாது எனப் பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர். 

இதுபற்றி நேற்று விளக்கமளித்திருந்த அவர், `` பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்துகொள்ளும் விழாவில் செல்ஃபி எடுக்கிறேன் என்று நடக்கக்கூட முடியாமல் செய்வது நியாயமா? தங்களைப் புகைப்படம் எடுக்கிறேன் என்று கேட்கமாட்டீர்களா? நான் புத்தன் என்று என்னைச் சொல்லவில்லை. உங்களைப்போல் நானும் ஒரு மனிதன்தான். எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மேலும், என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டு பின்பற்றுங்கள் என்று கூறவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் ஹீரோதான். அதேபோல், அடுத்தவர்களை எந்தளவுக்குத் துன்புறுத்துகிறோம் என்று நினைத்துப் பாருங்கள்” என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், இன்று தன் செயலுக்கு வருந்துவதாகத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், `` ஆர்வம் மிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படிதான் உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொள்வார்கள். ஒரு பிரபல கலைஞன் அதையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். என்ன இருந்தாலும் சிவக்குமார் செல்போனை தட்டிவிட்டது தவறு எனப் பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்காக உளமார வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.