‘எனக்குப் பதவி ஆசை கிடையாது; இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்’- அன்புமணி ராமதாஸ் காட்டம் | Anbumani ramadoss condemns on Tn Government

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (30/10/2018)

கடைசி தொடர்பு:14:50 (30/10/2018)

‘எனக்குப் பதவி ஆசை கிடையாது; இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்’- அன்புமணி ராமதாஸ் காட்டம்

``விவசாயிகளைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டு காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்'' என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

அன்புமணிராமதாஸ்

சிதம்பரத்தில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி கடலூர் தெற்கு மாவட்ட பா.ம.க சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க மாநில இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய  அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். `` காவிரி டெல்டா பகுதிக்கு மோடி அரசால் ஆபத்து வந்துள்ளது. காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உருவாக்க 3 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தத் திட்டம் காவிரி டெல்டா பகுதியில் அமைந்தால் இப்பகுதி பாலைவனமாக மாறிவிடும். இங்குள்ள 85 கிராமங்கள் அப்புறப்படுத்தப்படும். மக்கள் அகதியாகிவிடுவார்கள். தமிழகத்தில் உள்ள நிலம் இன்னும் ஆயிரமாயிரம் காலம் நன்றாக இருக்க வேண்டும். நம் சந்ததிகள் இந்த நிலத்தில் வாழ வேண்டும். இந்தப் பகுதியில் யாராவது ஆழ்குழாய் கிணறு அமைக்கக் குழாய்களை இறக்கினால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். 

மத்திய, மாநில அரசுகள் மக்களைக் கண்டுகொள்வது இல்லை. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் பா.ம.க கடுமையாக எதிர்க்கும், போராட்டமும் நடத்துவோம். எனக்குப் பதவி ஆசை கிடையாது. நான் 35 வயதிலேயே பதவியைப் பார்த்துவிட்டேன். மக்களைப் பற்றி நினைக்காமல் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கல்லா கட்டிக்கொண்டு உள்ளனர். தமிழகத்தில் அரசு உயர் பதவியில் இருக்கும் உயர் அதிகாரிகள், உயர்துறைச் செயலாளர்களில் 90 சதவிகிதம் பேர் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆட்சியைத் தூக்கி எரியும் காலம் வந்துவிட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஊழல் செய்தார் என்றுதான் எம்.ஜி. ஆர். தனிக்கட்சி தொடங்கினார். ஆனால், எம்.ஜி.ஆரால் இன்று லட்சத்துக்கும் அதிகமான ஊழல்வாதிகள் உருவாகிவிட்டார்கள். அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டு காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்” எனக் கூறினார்.