வெளியிடப்பட்ட நேரம்: 13:24 (30/10/2018)

கடைசி தொடர்பு:13:24 (30/10/2018)

ராஜ்பவனில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்? #VikatanBreaks

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகளை ராஜ்பவனுக்கு அழைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

ஆளுநரை சந்திக்கும் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள்

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் முக்கிய அதிகாரிகளை ஆளுநர் சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லஞ்ச ஒழிப்புத்துறையின் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்கள் தற்போது ராஜ்பவனில் ஆளுநரோடு ஆலோசனை நடத்தி வருவதாகச் செய்திகள் வந்துள்ளன.

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்பட்டது. முதல்வரின் கீழ் இருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை, இந்த வழக்கை முழுமையாக விசாரிக்காது என ஆர்.எஸ் பாரதி கூடுதல் மனுவைத் தாக்கல்செய்ய, இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். சி.பி.ஐ விசாரிப்பதற்கான அவசியம் இல்லை எனக்கூறி நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில்தான், தமிழகத்தின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து வருவதாகத் தெரியவருகின்றது.