வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (30/10/2018)

கடைசி தொடர்பு:14:05 (30/10/2018)

`காப்பாற்றப்பட்ட 3 வி.வி.ஐ.பி-க்கள்!’ நிர்மலாதேவி வாக்குமூலப் பின்னணி

7 மாதங்களுக்குப் பிறகு வெளியான அருப்புக்கோட்டை கல்லூரிப் பேராசிரியை நிர்மலாதேவியின் வாக்குமூலத்தால் தமிழகத்தில் உள்ள 3 விவிஐபிக்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

 நிர்மலாதேவி

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான புகாரில் அருப்புக்கோட்டை போலீஸாரால் ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள், நிர்மலா தேவி பணியாற்றிய கல்லூரி நிர்வாகத்தில் உள்ள சிலர், தமிழக ஆளுநர் அலுவலகத்தில் உள்ளவர்கள் எனப் பலருக்குத் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் நிர்மலா தேவி வழக்கு அதிக முக்கியத்துவம் பெற்றது. இதனால் அருப்புக்கோட்டை போலீஸாரிடமிருந்த இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும், சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு இதுவரை ஜாமீன்கூட கிடைக்கவில்லை. நிர்மலாதேவியை கடந்த ஏப்ரல் மாதத்தில் போலீஸ் காவலில் எடுத்த சிபிசிஐடி போலீஸார் அவரிடம் நீண்ட நெடிய வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர். அதில் அவர் பலரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். சென்னையிலிருந்து அருப்புக்கோட்டை வரையிலான அவரின் வாழ்க்கை பயணத்தை தெரிவித்த நிர்மலா தேவி, சிலரின் பெயர்களைச் சொல்லி அவர்களுடன் நெருக்கமாக இருந்ததாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அறநிலையத்துறை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் என நிர்மலா தேவியின் நட்பு வட்டாரம் விரிவடைகிறது. நிர்மலா தேவியுடன் நட்பில் இருந்தவர்களில் பலர் ஜாலியாக வெளியில் உள்ளனர். அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களும் எங்களின் விசாரணை வளையத்துக்குள் இருப்பதாக சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

 இந்தநிலையில் நிர்மலாதேவி வழக்கில் ஆளுநர் அலுவலகத்துக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுநர் அலுவலகத்திலிருந்து கடந்த அக்டோபர் 12-ம் தேதி செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் ``கடந்த ஒரு வருடத்தில் நிர்மலாதேவி ஆளுநர் அலுவலகத்துக்கு வந்ததே இல்லை. ஆளுநர் அலுவலகச் செயலாளர், அதிகாரிகளை அவர் சந்திக்கவில்லை. அன்னை தெரசா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் சென்ற போது அவர் விருந்தினர் மாளிகையில் தங்கவும் இல்லை. ஆனால், ஆளுநரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சில செய்திகள் வெளியிடப்படுகின்றன. இதுவரை மாநில அரசின் உரிமையில் ராஜ்பவன் தலையிட்டதில்லை. ஆனால், ஆதரமற்ற குற்றச்சாட்டுக்கள் வரும்போது அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்று கூறப்பட்டுள்ளது. 

ஏப்ரல் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட நிர்மலாதேவியின் வாக்குமூலம் 7 மாதங்களுக்குப் பிறகு வெளியாகியுள்ளதில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. அந்த வாக்குமூலத்தில் தமிழக ஆளுநர் அலுவலகத்தில் உள்ளவர்களின் பெயர்கள் இல்லை என்று சிபிசிஐடி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ``நிர்மலா தேவியின் தனிப்பட்ட வாழ்க்கையிலேயே பல பிரச்னைகள் உள்ளன. இதனால் அவரின் வாழ்க்கை தடம்மாறியுள்ளது. அது, அவரின் குடும்பத்தினருக்கும் தெரியும். குறிப்பாக நிர்மலாதேவியின் கணவர் சரவணபாண்டியனுக்கும் தெரிந்துள்ளது. இதனால்தான் நிர்மலா தேவி சுதந்திரமாகச் செயல்பட்டுள்ளார். அவரின் ரகசிய வாழ்க்கை பல நேரங்களில் குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளதாக வாக்குமூலத்தில் நிர்மலாதேவி குறிப்பிட்டுள்ளார். 

 மேலும், அவர் பணியாற்றிய கல்லூரியில் நிலவிய பிரச்னைகள் நிர்மலாதேவி மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. நிர்மலா தேவி என்ற அம்புவை அந்தக் கல்லூரி நிர்வாகம் பயன்படுத்தியதாக நாங்கள் கருதுகிறோம். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள்ள உயரதிகாரிகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்ட நிர்மலாதேவி அவர்கள் மூலம் பல காரியங்களை கச்சிதமாக முடித்திருக்கிறார். அவர்கள் யார், என்ற விவரங்களை விசாரணையின்போது எங்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களின் பெயர்கள் ரகசியமாக வைத்துள்ளோம். மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் நிர்மலாதேவி கூறிய நபர்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. இதனால்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. 

நிர்மலாதேவி குறிப்பிடும் விவிஐபிக்கள் பெயர்கள் எங்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர்கல்வித்துறையில் முக்கியப் பதவியில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் மூலம்தான் சில முக்கிய ஃபைல்கள் மூவ்வாகியுள்ளன. நிர்மலா தேவியிடம் கொடுக்கப்படும் அசைன்மென்ட்களைக் கச்சிதமாக முடிக்கத்தான் மாணவிகளைப் பயன்படுத்த நிர்மலாதேவி திட்டமிட்டுள்ளார். அதற்கு கருப்பசாமியும் முருகனும் உறுதுணையாக இருந்துள்ளதாக எங்களின் விசாரணையில் தெரியவந்தது.

நிர்மலாதேவியால் பயனடைந்தவர்கள் குறித்த ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. அவர்களில் பலர் கல்வித்துறையில் உயர்பதவிகளில் உள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேலிட க்ரீன் சிக்னலுக்காகக் காத்திருக்கிறோம். ஆளுநர் அலுவலகத்தில் உள்ளவர்களில் சிலரை தனக்குத் தெரியும் என்று நிர்மலா தேவி விசாரணையின்போது எங்களிடம் தெரிவித்தார். ஆனால் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் அவர்களின் பெயர்களை அவர் தெரிவிக்கவில்லை. இதனால் நிர்மலாதேவியின் வாக்குமூலத்தில் ஆளுநர் அலுவலகத்தில் உள்ள யாருடைய பெயர்களும் குறிப்பிடவில்லை" என்றார்.

சிபிசிஐடி போலீஸார் கூறுகையில், ``நிர்மலாதேவியின் செல்போன் கால் ஹிஸ்டரிகளை ஆய்வு செய்தபோது முன்னாள் அமைச்சர் ஒருவர், தமிழக அரசின் முக்கியப் பதவியில் இருக்கும் ஒருவர், கல்வித்துறையின் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் எனப் பத்துக்கும் மேற்பட்டவர்களின் விவரங்கள் எங்களுக்குக் கிடைத்தன. ஆனால், அவர்கள் மீது எங்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. நிர்மலாதேவியை மையமாக வைத்துதான் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யார், யார் என்ற தகவல் எங்களின் விசாரணை டீமில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரிகளுக்குத் தெரியும். ஆனால், எங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்துவிட்டோம். நிர்மலாதேவியுடன் அதிக நட்பில் இருந்த அந்த 3 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டோம். இதனால் இந்த வழக்கில் கைதானவர்களுக்கு விரைவில் தண்டனை வாங்கிக் கொடுத்துவிடுவோம். அதற்கான சாட்சிகளின் விவரம், ஆதாரங்கள் எல்லாம் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளோம்" என்றனர். 

 நிர்மலாதேவியின் வழக்கை பிசுபிசுத்துப்போக மறைமுக வேலைகள் நடந்துவருகின்றன. அதில் ஒன்றுதான் தற்போது வெளியாகிய நிர்மலாதேவியின் வாக்குமூலம்.