வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (30/10/2018)

கடைசி தொடர்பு:16:23 (30/10/2018)

பசும்பொன் குருபூஜை - தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111-வது ஜயந்தி விழாவினை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி

சுதந்திரப் போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111-வது ஜயந்தி விழா மற்றும் 56-வது குருபூஜை ஆகியன பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. குருபூஜையின் இறுதி நாளான இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. இதையடுத்து தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், காமராஜ், விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், மணிகண்டன், ராஜேந்திரபாலாஜி, பாஸ்கரன், எம்.பி-க்கள் அன்வர்ராஜா, விஜிலா சத்யானந்த், செந்தில்நாதன், பார்த்திபன் மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, மாநில துணைத் தலைவர்கள் நாகராஜன், அரசகுமார், மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

பசும்பொன் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி

தி.மு.க தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோருடன் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ``வடக்கே நேதாஜியைப் போல் தென்னகத்தில் புகழ் கொண்டவர் பசும்பொன் தேவர். அவரது புகழை வெளிப்படுத்தும் வகையில் மறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் ஆட்சியில் பசும்பொன்னில் நினைவு மண்டபம், மதுரையில் சிலை, சென்னையில் நினைவு இல்லம், பல இடங்களில் தேவர் பெயரில் கல்லூரிகள் என ஏராளமான பணிகள் செய்யப்பட்டன. தேசியப் பணி, சமுதாயப் பணி, சமூக நீதிக்கான பணி, அரசியல் தொண்டு என அனைத்தும் ஒரு சேர அமைந்தவர் தேவர். அவர் கடைப்பிடித்த லட்சியப் பாதையில் தி.மு.க தொடர்ந்து பணியாற்றும்'' என்றார். குருபூஜையினை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் சுமார் 8,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க