வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (30/10/2018)

கடைசி தொடர்பு:16:46 (30/10/2018)

`என் பொறுப்புக்குரிய வேலையையே செய்தேன்' - `சர்கார்' சர்ச்சை குறித்து கே.பாக்யராஜ்!

'விஜய் படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்பது யாருடைய நோக்கமும் இல்லை. இதில் அதிகம் காயம் பட்டது நான்தான்' என பாக்யராஜ் தெரிவித்துள்ளார். 

பாக்கியராஜ்

சர்கார் தொடர்பான கதை பிரச்னையில் இன்று காலை சுமுகமாகத் தீர்ப்பு காணப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கே.பாக்யரராஜ், “சில சமயங்களில் கருத்துவேறுபாடு வருவது மிகவும் சகஜமான விசயம். எங்களின் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் வருண் ராஜேந்திரனும், ஏ.ஆர் முருகதாஸும் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்குள் கதை தொடர்பாகச் சிறு கருத்து வேறுபாடு வந்துள்ளது. கள்ள ஓட்டு தொடர்பான கருவை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை ஊடகங்கள்மூலம் தெரிந்துகொண்ட வருண், தன்னுடைய கதையின் கருவும் இதுதான் எனக் கூறி சங்கத்தைத் தொடர்புகொண்டார். நான் ஏ. ஆர். முருகதாஸிடம் பேசினேன். இது வெளியில் கசியாமல் முடிந்த அளவு சமரசமாகச் செல்ல முயற்சி செய்தேன். முருகதாஸுக்கு மனக்கசப்பு இருந்தது. என் உழைப்பில் உருவான படத்தை எப்படி வேறு ஒருவருக்கு விட்டுத் தரமுடியும். இதன்மூலம், என்னைத் தவறாகப் பேசுவார்கள் என என்னிடம் கூறினார். இதே கருவை வருண்  10 வருடங்களுக்கு முன்பு எழுதினார். அவர், வளர்ந்துவரும் இயக்குநர் என்பதால் அவருக்கும் சிறு இடம் தரவேண்டும் என நான் முருகதாஸிடம் கேட்டுக்கொண்டேன். இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது. விஜய் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்பது யாருடைய நோக்கமும் இல்லை. இதில், அதிகம் காயம் பட்டது நான்தான். என் பொறுப்புக்கு உரிய வேலையை நான் செய்தேன். 

இந்த விசயத்தில், நான் கண்டிப்பாக விஜயை பாராட்டியே ஆகவேண்டும். இதில், அவர் மனம் புண்படக் கூடாது என அவரிடம் தொலைபேசியில் பேசினேன். அப்போது அவர், ஒரு வார்த்தை கூறினார். சார் என் படம், பார்த்துச் செய்யுங்கள் என்று அவர் சொல்லவில்லை. மாறாக, சார் உங்கள் மனதுக்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டுமே செய்யுங்கள் எனக் கூறினார். அந்த பெருந்தன்மை எனக்குப் பிடித்தது. ரசிகர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். பிரச்னை தெரியாமல் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிடுவது சரியானது அல்ல. நிறையப் பேர் வருத்தப்பட்டார்கள். கதையை வெளியில் கூறிவிட்டீர்கள் என்று பிரச்னையே அதுதான் என்றபோது, நான் எப்படி அதைத் தெரிவிக்காமல் இதை சுமூகமாக முடிக்கமுடியும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் நான் கூறினேன். இந்த விசயம் சமரசமாக முடிந்ததில் எனக்குச் சந்தோசம்.” எனத் தெரிவித்துள்ளார். 

நான் தடை கேட்டு நீதிமன்றத்துக்கு வரவில்லை, வெறும் அங்கீகாரத்துக்கு மட்டுமே வந்தேன். இந்தப் போராட்டத்துக்குக் காரணமே எஸ்.ஏ.சி சார் தான். என் பெயர் டைட்டிலில் வரும், அதை மட்டுமே நான் எதிர்பார்க்கிறேன்” என வருன் ராஜேந்திரன் பேசினார்.