வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (30/10/2018)

கடைசி தொடர்பு:12:00 (31/10/2018)

சிக்கவைக்கப்பட்டாரா இன்ஸ்பெக்டர் சீதாராமன்? - மோசடிப் புகாரில் தப்பிய காக்கிகள் 

இன்ஸ்பெக்டர் சீதாராமன்

மருத்துவ சீட்டுக்கு பணத்தை வாங்கி ஏமாற்றிய வழக்கில், சில உயரதிகாரிகளின் பேராசையால் இன்ஸ்பெக்டர் சீதாராமன் மட்டும் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை நொளம்பூரைச் சேர்ந்தவர் ஜபருல்லா கான். இவரின் மருமகளான டாக்டர் ஷக்கீனா, மருத்துவ மேல் படிப்பான எம்.எஸ் படிக்க நீட் தேர்வு எழுதினார். இந்தச் சமயத்தில் என்ஆர்ஐ கோட்டாவில் ஷக்கீனாவுக்கு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி 1.72 கோடி ரூபாயை நெய்வேலியைச் சேர்ந்த பிரவீன், பாலாஜி, செல்வராஜ், சக்கரவர்த்தி மற்றும் மருதாச்சலம் ஆகியோர் வாங்கியதாக ஜபருல்லா கான், அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 12.9.2018ல் புகார் கொடுத்தார். அந்தப் புகார், கடந்த 14.9,2018ல் துணை கமிஷனர் அலுவலகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது. 

இந்த வழக்கு, உதவி கமிஷனர் ஒருவரின் மேற்பார்வையில் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். மருத்துவ சீட்டுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக பிரவீன், பாலாஜி, செல்வராஜ், மருதாச்சலம் ஆகிய 4 பேரை போலீஸார் கைதுசெய்தனர். இந்த வழக்கில் அதிரடித் திருப்பமாக எஸ்.ஆர்.எம்.சி (போரூர்) குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீதாராமன், ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். சட்ட ஒழுங்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர் நாராயணன் எஃப்ஐஆர் பதிவுசெய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சீதாராமன் இடமாற்றப்பட்ட பின்னணியில் பல தகவல்கள் உள்ளன. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஐபருல்லா கான் கொடுத்த மோசடிப் புகாரை விசாரித்து, 4 பேரை கைதுசெய்துள்ளோம். இந்த வழக்கின் விசாரணையின்போது, ஜபருல்லா கானிடம் 1.72 கோடி ரூபாயை வாங்கி ஏமாற்றியவர்களிடம் இருந்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அதற்குள் இந்த வழக்கின் விசாரணை வேறுவிதமாகச் செல்வதாக போலீஸ் உயரதிகாரிகளுக்கு ரிப்போர்ட் கொடுக்கப்பட்டது. இதனால்தான் பணத்தைக்கூட மீட்காமல் அவசரகதியில் 4 பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம். இதற்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் யார் என்று விசாரணை அதிகாரிகளுக்குத் தெரியும். ஆனால், உயரதிகாரிகள் கொடுத்த தகவலின்அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சீதாராமன் ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டுவிட்டார்" என்றனர்.  

மோசடி செய்யப்பட்ட தொகை ஒரு கோடிக்கு மேல் இருந்தால், அதை மத்திய குற்றப்பிரிவு போலீஸார்தான் விசாரணை நடத்துவார்கள். 50 லட்ச ரூபாய் வரையிலான மோசடிப் புகார்கள்தான்  லோக்கல் போலீஸ் நிலையங்களில் விசாரிக்கப்படும். ஆனால், துணை கமிஷனர் அலுவலகத்தில் 1.72 கோடி ரூபாய் புகார் கொடுக்கப்பட்டதும் முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு இந்தப் புகாரை மத்திய குற்றப்பிரிவுக்கு உயரதிகாரிகள் அனுப்பியிருக்கலாம். ஜபருல்லா கான் கொடுத்த புகாரை விசாரித்தபோதுகூட மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றும் எண்ணத்தில்தான் விசாரணை நடந்துள்ளது. ஆனால், அதை காவல் துறை உயரதிகாரிகள் செய்யவில்லை. மாறாக, உதவி கமிஷனர் மேற்பார்வையிலான போலீஸ் டீம் பணத்தை ஏமாற்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்துள்ளது. பணம்குறித்து விசாரித்த சமயத்தில்தான் வழக்கின் விசாரணையின் போக்கு வேறுவிதமாகச் சென்றுள்ளது. அந்தத் தகவல் உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில் அவசரகதியில் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கோடிக்கணக்கில் பணத்தை இழந்த 68 வயதாகும் ஐபருல்லா கான், உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கிவிட்டார். தற்போது, ஐபருல்லா கான் கொடுத்த பணம் யாரிடம் இருக்கிறது என்ற தகவல்கூட தெரியவில்லை. மேலும் 50 லட்சம் ரூபாய்க்கான கணக்கை மட்டும் போலீஸார் விசாரணையின்போது கண்டறிந்துள்ளனர். 

  கைதானவர்கள்

இந்த வழக்கைப் பொறுத்தவரை விசாரணைகுறித்த தகவல்கள் உடனுக்குடன் உயரதிகாரிகளுக்கு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், மாநகர உளவுப்பிரிவு போலீஸார் ஆகியோர்மூலம் காவல் துறையின் மேலிடம் வரை தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அம்பத்தூர் காவல் சரக காக்கிகளில் சில உயரதிகாரிகளின் பேராசைக்கு இன்ஸ்பெக்டர் சீதாராமன் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். 

 மருத்துவ மேல்படிப்பிற்கான மோசடிப் புகாரில் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, (எஃப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன்) போலீஸாரின் வாக்கி டாக்கி அலறியுள்ளது. அதில் பேசிய உயரதிகாரி, எஸ்.ஆர்.எம்.சி போலீஸ் நிலையத்தில் விசாரிக்கப்பட்ட மருத்துவ சீட் விவகாரம் தொடர்பாக சிலரிடம் கடுமையாகப் பேசியுள்ளார். அதன்பிறகுதான் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீதாராமனை வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று அவருக்கு மேல் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர். போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட  பிரவீன், சட்டம் படித்திருப்பதாக விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.  பாலாஜியும் செல்வராஜும் உயர் படிப்பிற்கான சீட் வாங்கிக் கொடுக்கும் வேலை செய்துவரும் நிறுவனத்தை நெய்வேலியில் நடத்திவருகின்றனர். பிரவீனை சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரியில் முக்கிய பதவியில் இருப்பதாகக்கூறித்தான் ஐபருல்லா கானிடமிருந்து பணம் வாங்கியுள்ளனர். பணத்தை சம்பந்தப்பட்ட கல்லூரியின் வளாகத்தில் வைத்து வாங்கியதாக போலீஸாரின் விசாரணையின்போது அவர்கள் தெரிவித்துள்ளனர். வாங்கிய பணத்தை பங்கு போட்டுப் பிரித்த அவர்கள், நீட் தேர்வால் ஜபருல்லாவின் மருமகளுக்கு சீட் வாங்கிக் கொடுக்கமுடியவில்லை என்று போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர். எஃப்ஐஆர் போட வேண்டாம்; வாங்கிய பணத்தை கொடுத்துவிடுகிறோம் என அவர்கள் கூறியுள்ளனர். 

இதுகுறித்து  போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு,  ``விசாரணையின்போது இன்ஸ்பெக்டர் சீதாராமன் பேரம் பேசியதாக எங்களுக்குத் தகவல் வந்தது.  மேலும், அவர் சிலரைத் தாக்கியதாகவும் எங்களுக்குத் தகவல் வந்தது. இதனால்தான் அவரை ஆயுதபடைக்கு மாற்றினோம். இந்த வழக்கு எஸ்.ஆர்.எம்.சி போலீஸ் நிலையத்திலிருந்து மத்திய குற்றப்பிரிவுக்கு இன்னும் சில தினங்களில் மாற்றப்படும்" என்றார்.  இந்த வழக்கில் இன்ஸ்பெக்டரைத் தவிர்த்து இன்னும் சிலர் பேரம் பேசியதாக தகவல் உள்ளதே என்று கேட்டதற்கு, விசாரணை நடந்துகொண்டிருப்பதாக அந்த உயரதிகாரி தெரிவித்தார். 

பணத்தை வாங்கியவர்களில் சிலர், அதைத் திரும்பக் கொடுத்துவிடுவதாக விசாரணை டீமில் உள்ள உயரதிகாரிகளிடம் கூறியுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளும் நடந்துள்ளது. எஃப்ஐஆர் பதிவு செய்யாமலேயே வழக்கை பைசல் செய்துவிடலாம் என்ற எண்ணத்திலும் சில காக்கிகள் இருந்துள்ளனர். இந்தச் சமயத்தில்தான் வழக்கறிஞர் ஒருவர் செய்த ரகளையால் இன்ஸ்பெக்டர் சீதாராமன் சிக்க வைக்கப்பட்டுவிட்டார் என்கின்றனர் வழக்கின் உள்விவரம் தெரிந்தவர்கள். 

 இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சீதாராமனிடம் பேச முயன்றோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவரின் கருத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்.