வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (30/10/2018)

கடைசி தொடர்பு:19:14 (30/10/2018)

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி, பண வசூலில் இறங்கியுள்ளது ஒரு கும்பல்.

மோசடி

'வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறோம், அரசுப் பணி வாங்கித் தருகிறோம்' என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் டிசைன் டிசைனாகக் கொள்ளையடிப்பார்கள். அதுபோன்ற சதுரங்க வேட்டைக் கும்பல், தற்போது டார்கெட் செய்திருப்பது இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தைத்தான். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக இயங்கிவருகிறது, இந்திய விமானநிலையங்களின் ஆணையம் (Airports Authority of India). இந்நிலையில் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக, வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜை அனுப்புவது, தொடர்ந்து போன் செய்வது, இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தின் பெயரில் ஓர் லெட்டர் பேடு தயார்செய்து என்று ஸ்கெட்ச் போட்டு மோசடி செய்துவருகிறது இந்தக் கும்பல்.

இதுகுறித்து தனியார் விமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் உதயக்குமார், "முதலில் வாட்ஸ் அப்பில்  மெசேஜ் அனுப்பினார்கள். பிறகு, தொடர்ந்து போன் செய்தார்கள். இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தின் பெயரில் ஓர் லெட்டர் பேடை, தயார் செய்து, அதில், நமது பெயரைக் குறிப்பிட்டு நீங்கள் இந்தப் பணிக்கு தேர்வாகியுள்ளீர்கள் என்று சொல்லி, பதவி, சம்பளத்தையும் குறிப்பிட்டு, உங்களது ஃபைலை ஃபார்வர்டு செய்கிறோம்.  இதற்கான புராசஸிங் ஃபீஸ் 4 ஆயிரம் ரூபாயைச் செலுத்துங்கள் என்று கூறினார்கள்.

எனக்கு சந்தேகம் ஏற்பட்டு, இந்திய விமான நிலைய ஆணையத்தைத் தொடர்புகொண்டு கேட்டேன். அவர்கள், "இது போலியானது. நாங்கள் பணம் எல்லாம் கேட்பதில்லை. இதை நம்பி பணம் கொடுத்துவிடாதீர்கள்" என்றனர். இந்தக் கும்பலிடம் பலர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இதுதொடர்பாக, போலீஸிலும் புகார் அளிக்க உள்ளேன்" என்றார்.