வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (30/10/2018)

கடைசி தொடர்பு:20:30 (30/10/2018)

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் 79 பேர் மீதான வழக்குகள் ரத்து! நீதிமன்றம் உத்தரவு

சமூக பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடி வரும் முகிலன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வரும் 'காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர்'  79 பேர் மீது போடப்பட்ட மூன்று வழக்குகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. 

முகிலன்

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய முகிலன், ``மணல் குவாரிகளை மூடக்கோரி 3,000 நபர்கள் பங்கேற்ற உண்ணாநிலை போராட்டத்தில் அனுமதியின்றி பேரணி சென்றதாகக் கடந்த 29.09.2016 அன்று கரூர் வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தினர் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து 14.11.2016 அன்று மணல் குவாரிகளை மூடக்கோரி காவிரி ஆற்றில் இறங்கிப் போராடிய நூற்றுக்கணக்கானோரில் 36 பேர் மீது போடப்பட்ட மற்றொரு வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று ரத்து செய்துள்ளது. இதேபோல் கடந்த 12.10.2016 அன்று சட்டவிரோத மணல் குவாரிகளை முற்றுகையிட்டு கைதானவர்களில் 30 பேர் மீது அதே காவல் நிலையத்தில் போடப்பட்ட மற்றொரு வழக்கை கடந்த 26-ம் தேதி உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. 

இதன் மூலம் காவிரியைக் காக்கப் போராடியதற்காக காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட மூன்று பொய் வழக்குகளிலிருந்து 79 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் நீதியை நிலைநிறுத்திய நீதிபதி அவர்களுக்குக் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். காவிரியைக் காக்க போராடியவர்களுக்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கை நடத்திய வழக்கறிஞர். அழகுமணி பாராட்டுக்குரியவர். கைது, வழக்குகள், சிறை என அடக்குமுறைகளுக்கு ஆளான காவிரி காக்கும் போராளிகளுக்கு வாழ்த்துகள்'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க