வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (30/10/2018)

கடைசி தொடர்பு:15:17 (31/10/2018)

கராத்தேவுக்கு விரைவில் கல்தா! - காங்கிரஸ் தலைமை பிளான்..?

ரஜினி - கராத்தே தியாகராஜன்


காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், இன்று நடிகர் ரஜினிகாந்த்தை அவர் இல்லத்தில் சந்தித்தார். அடிக்கடி நடிகர் ரஜினிகாந்த்தை கராத்தே தியாகராஜன் சந்தித்துவருவது, காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்படுவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், கராத்தே தியாகராஜனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்ற கருத்து நிலவிவருகிறது. இதனிடையே இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பெயர் வெளியிட விரும்பாத மூத்த பிரபலம் ஒருவரிடம் பேசியபோது, ``கராத்தே தியாகராஜன் ரஜினிகாந்த்தை சந்திப்பதைப் பற்றி முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை.  அவர் சாதாரணமானவர். இந்தக் கட்சியில கட்டுப்பாடே இல்லை; என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அதிகாரபூர்வமில்லாமல் அனைத்தையும் செய்கிறார். முரசொலி கட்டுரை வெளியாகி சமரசம் ஏற்பட்டுவிட்டது. இது அவர்களோடு முடிந்துவிட்டது. பிறகு, இவர் அதைப்பற்றி ஏன் பேசவேண்டும்? இப்படித் தனித்து இயங்குபவர்கள்மீது கட்சி இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததில்லை. ஆனால், இனிமேல் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறது. கராத்தே தியாகராஜன் ரஜினியைச் சந்தித்தில் காங்கிரஸுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. 

ஒருவேளை ரஜினி கட்சி தொடங்கினால், கராத்தே தியாகராஜன் அங்கு சேர்ந்துவிடுவதற்குக்கூட வாய்ப்பிருக்கிறது. இப்படியான சூழலில், காங்கிரஸ் மேலிடம் இவர்மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது. கட்சி உறுப்பினர்களையே தனக்குச் சம்பள ஆட்களாக நியமித்திருப்பதாக இவர்மீது மேலிடத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டுவருகிறது. ப.சிதம்பரம் தரப்புகூட இவருக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரியவில்லை.  அதனால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், நிச்சயம் கராத்தே தியாகராஜனுக்கு எம்.பி சீட் கிடைக்காது. எம்.எல்.ஏ சீட்டு கூடக் கிடைக்க வாய்ப்பில்லை. கட்சி இவரை நீக்குவதற்கே வாய்ப்புகள் அதிகம் " என்றார்.    

காங்கிரஸ் தரப்பின் இந்தப் பதிலை அடுத்து, கராத்தே தியாகராஜனைத் தொடர்புகொண்டோம். அதில், ``ரஜினிகாந்த்தைப் பார்ப்பதற்காக நீக்குவார்கள் என்றால் தமிழக காங்கிரஸ் தலைவர்கூடத்தான் ரஜினிகாந்த்தை சந்தித்தார், அதற்காக அவரை நீக்கிவிட முடியுமா? கட்சி உறுப்பினர் ஒருவரை நீக்குவதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கிறது. இன்னாரை அடிக்கடி சந்திக்கிறார் என்பதற்கெல்லாம் நீக்கிவிட முடியாது" என்றார்.