வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (30/10/2018)

கடைசி தொடர்பு:19:40 (30/10/2018)

சொத்துக்குவிப்பு வழக்கில் புதுச்சேரி எம்.எல்.ஏ-வுக்கு ஓராண்டு சிறை! சி.பி.ஐ நீதிமன்றம் அதிரடி

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் புதுச்சேரி எம்.எல்.ஏ மற்றும் அவரின் தந்தை இருவருக்கும் ஓர் ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ அசோக் ஆனந்த். இவரின் தந்தை ஆனந்தன் 2007-08 ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலப் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளராகப் பணியாற்றிவர். இவர்களுக்குச் சொந்தமாகத் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆனந்தன் பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிமாகச் சொத்துகளைக் குவித்ததாக சி.பி.ஐ-க்கு புகார் சென்றது.

அதனடிப்படையில் ஆனந்தன் மற்றும் அவரின் மகன் அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ இருவரிடமும் சி.பி.ஐ நடத்திய விசாரணையில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்குவிப்பு செய்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தது சி.பி.ஐ. இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை இன்று முடிவடைந்த நிலையில் தலைமை நீதிபதி தனபால் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என்று உறுதி செய்ததோடு இருவருக்கும் தலா ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத்தவறினால் தலா 3 மாதம் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், வருமானத்துக்கு அதிகமாகக் குவிக்கப்பட்ட ரூ. 1.57 கோடி மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் எம்.எல்.ஏ ஒருவருக்குச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க