வாட்ஸ்அப் வதந்தி - ஜெயா டிவி முன்பு திடீர் போலீஸ் குவிப்பு! | Police force suddenly put before Jaya tv office

வெளியிடப்பட்ட நேரம்: 21:12 (30/10/2018)

கடைசி தொடர்பு:21:24 (30/10/2018)

வாட்ஸ்அப் வதந்தி - ஜெயா டிவி முன்பு திடீர் போலீஸ் குவிப்பு!

ஜெயா டிவி

‘ஜெயா’ தொலைக்காட்சி’யின் சென்னை அலுவலகம் முன்பாக இன்று திடீரென போலீஸ் குவிக்கப்பட்டது. 

சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள 100 அடி சாலையில் ஜெயா தொலைக்காட்சியின் அலுவலகம் அமைந்துள்ளது. இன்று காலை 8.30 மணியளவில் திடீரென அங்கு 2 பெண் காவலர்கள் உட்பட கிண்டி பகுதி போலீஸார் 7 பேர் அலுவலகத்தின் முன்பு நின்றனர். அவர்களுடன் கைதுசெய்பவர்களை ஏற்றிச்செல்லும் போலீஸ் வாகனம் ஒன்றும் கொண்டுபோய் நிறுத்தப்பட்டது. இதனால், காலையில் பணிக்கு வந்த பணியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. மூன்று மணி நேரம் அங்கிருந்துவிட்டு அவர்கள் கிளம்பிச் சென்றனர். 

நிர்வாகத் தரப்பில் அங்கிருந்த போலீஸாரிடம் என்ன காரணம் எனக் கேட்க, `தீபாவளி போனஸ் தரவில்லை எனக் கூறி ஜெயா தொலைக்காட்சி ஊழியர்கள் போராட்டம் நடத்துவதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதற்காகவே வந்திருக்கிறோம்’ என்று போலீஸார் தரப்பில் கூறினார்கள் என்கிறார்கள், ஜெயா தொலைக்காட்சி வட்டாரத்தில். 

ஆனால், ஜெயா தொலைக்காட்சி ஊழியர்களுக்கு கடந்த 26-ம் தேதி தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுவிட்டது என்றும் இதையும் மீறி இது குறித்து வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பவேண்டிய தேவை என்ன? திடீர் போலீஸ் குவிப்புக்குக் காரணம் என்ன என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

இதற்கிடையில், வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பியது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் ஆணையரிடம் ஜெயா தொலைக்காட்சி தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.