வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (31/10/2018)

கடைசி தொடர்பு:00:00 (31/10/2018)

வெடி வெடிப்பது நம் உடலில் உள்ள எந்தெந்த பாகங்களைப் பாதிக்கும் தெரியுமா?

தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிப்பதென்பது தவிரிக்க முடியாத அங்கமாகவே திகழ்கிறது. புத்தாடை, இனிப்பு ஆகியவற்றுக்கு நிகராக பட்டாசு வாங்குவதற்கும் பெரும் தொகையைச் செலவழிப்பவர்கள் நம்மில் பலர்.  திரி கிள்ளி தீ வைத்ததும், பெரும் சப்தத்துடன் வெடி வெடித்துவிட்டால், அவரின் முகத்தில் வெற்றிப்புன்னகை படரும். ஆனால், இது காக்லியாவுக்கு பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா?

 

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த நாரயணசாமி, ‘’காதுகளின் உட்செவியில் உள்ள மிக முக்கியமான பாகம்தான் காக்லியா. இது திரவத்தால் ஆனது. இதில் ஏராளமான நரம்பு செல்கள் நிறைந்திருக்கும். அதிக சத்தத்துடன் வெடி வெடிக்கும்போது, காக்லியாவில் உள்ள நரம்பு செல்கள் அதிர்வுற்று பாதிக்கப்படும்.

செல்கள் அழிந்துபோவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இதனால், காது கேட்காத தன்மை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், மூளை உள்ளிட்ட உள் உறுப்புகளும் பாதிக்கப்படும். எனவே, வெடி வெடிப்பதை நாம் இயன்றவரை குறைத்துக்கொள்ள வேண்டும்” என்றார். 

வெடி வெடிப்பது காக்லியாவுக்கு மட்டுமல்ல, நுரையீரலுக்கும்கூட பிடிக்காது. ’’வெடி வெடித்த பிறகு வெளியாகக் கூடிய மக்னீசியம் ஆக்ஸைடு, கந்தக டை ஆக்ஸைடு, பொட்டாசியம் ஆக்ஸைடு ஆகியவையால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுவாச நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படும். இதனால், உலகின் பெரும்பாலான நாடுகளில் அங்குள்ள மக்கள் வெடி வெடிப்பதைத் தவிர்த்து, மத்தாப்புகள் மட்டும் பயன்படுத்துகிறார்கள். வெடியோடு ஒப்பிடும்போது, மத்தாப்புகளில் பாதிப்புகள் குறைவு” என்கிறார்.