வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (31/10/2018)

கடைசி தொடர்பு:07:09 (31/10/2018)

பசும்பொன்னில் தினகரன் ஆதரவாளர்களால் கிழித்தெறியப்பட்ட முதல்வர் - துணை முதல்வர் பேனர்கள்!

பசும்பொன்னுக்கு அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் போர்டுகளை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினகரன் ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்ட பேனர்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா இன்று கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் நடந்தது. இங்குள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் காலையில் அஞ்சலி செலுத்திச் சென்றனர். இதைத் தொடர்ந்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், நடிகரும் எம்.எல்.ஏ.வுமான  கருணாஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

வைகோ அஞ்சலி

இதன் பின்னர் அ.ம.மு.க கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தங்கதமிழ்செல்வன், பரமக்குடி முத்தையா, அமைப்புச் செயலாளர்கள் ஜி.முனியசாமி, வ.து.நடராஜன், மாவட்டச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்களுடன் அஞ்சலி செலுத்த பசும்பொன் வந்தார். தினகரனுடன் ஏராளமான வாகனங்களில் தொண்டர்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பசும்பொன் கிராமத்துக்குள் தினகரன் நுழைந்தபோது போக்குவரத்து முற்றிலும் தடை பட்டுப்போனது. இதன் பின்னர் நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தினகரன் அஞ்சலி

இதைத் தொடர்ந்து பசும்பொன் தேவர் நினைவிடத்தில் தினகரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில், பசும்பொன்னுக்கு அஞ்சலி செலுத்தவந்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை வரவேற்று மாவட்ட அமைச்சர் மணிகண்டன், மாவட்டச் செயலாளர் முனியசாமி ஆகியோர் ஏராளமான ஃப்ளக்ஸ் போர்டுகளை வைத்திருந்தனர். இதைக் கண்ட தினகரனின் ஆதரவாளர்கள் ஃப்ளக்ஸ் போர்டுகளில் இருந்த முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் மணிகண்டன் ஆகியோரது படங்களை சேதப்படுத்திக் கிழித்து வீசினார். தினகரன் ஆதரவாளர்களின் இந்தச் செயலை போலீஸாரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.