வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (31/10/2018)

கடைசி தொடர்பு:07:16 (31/10/2018)

``அவள் இதயத் துடிப்பில் உங்கள் பெயர் இருக்கும்” - விகடன் செய்தியால் கரூர் சிறுமிக்கு குவிந்த உதவி!

தங்களது மகளின் இரண்டாவது இதய ஆபரேஷனுக்கு பணம் செலவழிக்க வழியில்லாமல் அல்லாடிய ஏழை தம்பதி பற்றிய செய்தியை விகடன் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். நமது செய்திக்குப் பிறகு அவர்களுக்கு உதவி கிடைத்திருக்கிறது. இன்னும் பலர் உதவுவதாகவும் சொல்லி இருக்கிறார்களாம்.

 சிறுமி

கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர்கள் மோகன்ராஜ், ஜெயலட்சுமி தம்பதி. கூலி வேலை பார்க்கும் இவர்களது எட்டாம் வகுப்பு படிக்கும் பதிமூன்று வயது மகள் கிருத்திகா. பிறந்ததில் இருந்தே கிருத்திகாவுக்கு இதயத்தில் பிரச்னை இருக்க, 'இரண்டு வயதுக்குள் ஆபரேஷன் பண்ணிடனும்' என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், குடும்ப வறுமையால் கிருத்திகாவுக்கு 11 வயது கடந்தும் ஆபரேஷன் செய்ய முடியவில்லை. ஆனால், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கிருத்திகாவுக்கு நிலைமை சீரியஸாக, கரூரைச் சேர்ந்த இணைந்த கைகள் என்ற அமைப்பினர் உதவினர். சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டி மூன்று லட்சம் செலவு செய்து சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தனர். இந்த நிலையில், கிருத்திகாவுக்கு இரண்டாவது ஆபரேஷனை இன்னும் இரண்டு மாதங்களில் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள். 'நான்கு லட்சம் வரை அதற்கு செலவாகும்' என்பதால், கையைப் பிசைந்து நிற்கிறார்கள் கிருத்திகாவின் பெற்றோர். முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு லட்சம், பாரத பிரதமர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம்  ரூ 50,000 என்று ஒன்றரை லட்சம் கவராகிவிடும். மீதமுள்ள இரண்டரை லட்சம் ரூபாயை திரட்ட வேண்டுமே என் கண்கலங்கி நின்றார்கள். இவர்களின் இந்த நிர்கதியான நிலை பற்றி கடந்த 22.10.2018 அன்று,"கிருத்திகாவுக்கு இரண்டாவது ஆபரேஷன் பண்ணனும்... உதவுங்க!" - கலங்கும் ஏழைப் பெற்றோர் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தச் செய்தி நமது இணையதள வாசகர்களை உருக்க, கிருத்திகா இதய அறுவை சிகிச்சைக்காக இதுவரை ரூ.80,000 வரை நிதி அனுப்பி இருக்கிறார்கள்.


 சிறுமி

இந்த நிலையில், நம்மிடம் பேசிய கிருத்திகாவின் பெற்றோர், ``நாங்க ஏழ்மை நிலையில் உள்ளோம். மொத்தமா 10,000 ரூபாயை பார்க்கிறதே பெருசு. இரண்டரை லட்சத்துக்கு எங்கே போவது. ஆனா, எங்க நிலையை செய்தியா போட்டீங்க. முகம் தெரியாத பலரும் எங்களை கூப்புட்டு பேசியதோடு, எங்களுக்குப் பண உதவி செஞ்சுருக்காங்க. இதுவரை 80,000 ரூபாய் வரை வந்திருக்கு. சென்னையைச் சேர்ந்த ஒருவர் தன்னோட பெயரைச் சொல்ல மறுத்துட்டு, இன்னும் சில தினங்களில் நேர்ல கரூருக்கு வந்து 50,000 ரூபாய் தர்றதா சொல்லி இருக்கார். சிங்கப்பூரில் பணிபுரியும் அருண்ங்கிறவர் இருபத்தஞ்சாயிரத்தை அனுப்பினார். அனுப்பிட்டு,'போதிய பணம் கிடைக்குதான்னு பாருங்க. இல்லைன்னா, எனக்கு போன் பண்ணுங்க. உங்க பொண்ணு ஆபரேஷனுக்கு இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்க...தட்டாமல் தர்றேன். கிருத்திகா என் தங்கச்சி. அவளை நல்லா பார்த்துக்குங்க'ன்னு சொன்னதும் எங்க கண்ணே கலங்கிட்டு. எங்க கஷ்டத்தைப் போக்கி நிதியுதவிக்கு வழி செஞ்ச விகடனை எங்க ஆயுசுக்கும் மறக்கமாட்டோம் தம்பி. இனி கிருத்திகா இதயம் துடிக்கும் ஒவ்வொரு துடிப்பிலும் அவளுக்கு உதவி பண்ணினவங்களோட பெயர் இருக்கும். மீதி பணத்துக்கு என்ன பண்றதுன்னு தெரியலை" என்றார்கள். இவர்களுக்கு உதவ நினைப்பவர்கள் 9894787728, 7010349268 என்ற எண்களில் தொடர்புகொண்டு பேசி உதவலாம்.