வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (31/10/2018)

கடைசி தொடர்பு:03:00 (31/10/2018)

தமிழகத்தில் பரவிவரும் காய்ச்சல் -சுகாதாரத்துறை செயலர் விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்றம்

 

டெங்கு , சிக்கன்குனியா போன்ற தீவிரமான காய்ச்சல்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலரிடம் உரிய விளக்கம் பெற்றுத்தர உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகளாக சிக்கன்குனியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்கள் பொதுமக்களை அச்சப்படுத்திவருகிறது. இது போன்ற காய்ச்சல்கள் உயிரைப் பறிக்கும் அளவிற்குத் தனது வீரியத்தைக் காட்டுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் காய்ச்சல்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில்,”தமிழகத்தில் தற்போது டெங்கு, சிக்குன்குனியா,  உள்ளிட்ட உயிரைப் பாதிக்கும் காய்ச்சல்கள் அதி தீவிரமாக  பரவிவருகிறது.  இது போன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்துள்ளனர். எனவே போர்க்கால அடிப்படையில்  டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்த மாவட்டங்களிலும் உள்ள அரசு,  மருத்துவமனைகளில் போதுமான மருந்து மாத்திரைகள், சிறப்பு வார்டுகளை ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தனது மனுவில் கூறியிருந்தார். 

இந்நிலையில் இந்த மனுவானது  நீதிபதிகள் சுந்தரேஷ் , சதீஷ்குமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த போது, ”இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலரிடம்,  உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரம் ஒத்திவைத்தனர்.