வெளியிடப்பட்ட நேரம்: 23:20 (30/10/2018)

கடைசி தொடர்பு:11:37 (31/10/2018)

தொடர் நஷ்டம் - ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி அரசு வசம்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவக்கல்லூரியானது அரசு மருத்துவக்கல்லூரியாக மாற்றப்படுகிறது. இதற்கான ஆணையைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 

மருத்துவக் கல்லூரி

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ராமலிங்கம் காசநோய் மருத்துவமனையின் இடத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டது. 1986-ல் இதற்காக அந்த மருத்துவமனையின் 344.36 ஏக்கர் நிலத்தைச் சாலை போக்குவரத்து நிறுவனத்துக்கு (ஐ.ஆர்.டி) சுகாதாரத்துறை வழங்கியது. இந்த நிலத்தில் அமைக்கப்பட்ட ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது, 1992 -93 -ம் கல்வியாண்டு முதல் செயல்படத் தொடங்கியது. முதல் ஆண்டில் 60 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதில், 65 சதவிகித இடம் அரசு ஒதுக்கீட்டுக்காகவும், மீதமுள்ள 35 சதவிகித இடங்கள் ஐ.ஆர்.டி நிர்வாகத்துக்காகவும் பிரித்து அளிக்கப்பட்டது. அந்த நிர்வாக ஒதுக்கீட்டில், மாநிலம் முழுவதும் அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பிள்ளைகள் மதிப்பெண் அடைப்படையிலும், சமூக இனச் சுழற்சி அடைப்படையிலும் கல்லூரியில் சேர்க்கப்படுகின்றனர். 

2017 - 18ம் கல்வியாண்டில் மருத்துவ சேர்க்கை இடங்கள் 60 முதல் 100 ஆக அதிகரிக்கப்பட்டது. இதில், 15 சதவிகித இடங்கள் மத்திய அரசு ஒதுக்கீட்டாகவும், மீதமுள்ள 85 சதவிகித இடங்களில், 65 சதவிகிதம் அதாவது 55 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கும், 30 இடங்கள் ஐ.ஆர்.டி நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் என்று பிரிக்கப்பட்டது.  இதற்கிடையில், 2008 - 09ம் கல்வியாண்டில் இதே கல்லூரியில் 20 மாணவர்களைக் கொண்டு டிப்ளமோ நர்ஸிங் படிப்பும் தொடங்கப்பட்டது. இது  நடப்பு கல்வியாண்டில் 60 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பிள்ளைகள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்து கழகங்கள் கடும் நிதி இழப்பை எதிர்கொண்டு வருகின்றன. இதைச் சமாளிக்க முடியாமல், அரசு தரப்பிலிருந்து சிறப்பு நிதி நல்கையை எதிர்பார்த்து நிற்கின்றன. ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக்கல்லூரியிலும் இதன் பாதிப்பு எதிரொலித்து வருகிறது. இதனால் தொடர்ச்சியாக கல்லூரியை நடத்தி வருவது போக்குவரத்துறைக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது. மோசமான நிதி நிலைமையை அடுத்து பெருந்துறை மருத்துவக்கல்லூரியைச்  சுகாதாரத்துறை ஏற்று நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.  போக்குவரத்து ஊழியர்களின் பிள்ளைகளுக்கான இடங்கள் பாதிப்படையாத வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.