வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/10/2018)

கடைசி தொடர்பு:07:36 (31/10/2018)

``ஹரிணி தர்மபுரியில் இருக்கா" - அடுத்தடுத்து போலீஸாருக்கு வந்த மூன்று போன்கால்கள்!

``ஹரிணி பாப்பா தர்மபுரியில் இருக்கா" என்று போலீஸாருக்கு மூன்று பேர் ஒரே நாளில் போன் பண்ணிச் சொல்ல, அங்கே விரைந்த தனிப்படை ஹரிணியை தேடி வருகிறது.

 ஹரிணி


காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இனத் தம்பதியான வெங்கடேசன், காளியம்மாளின் இரண்டு வயது மகள்தான் ஹரிணி. கடந்த மாதம் 15-ம் தேதி பாசி மணிகள் விற்கப் போன அவர்கள், அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கினர். நடுராத்திரியில் ஹரிணி காணாமல் போக, பதறிப்போன அந்தத் தம்பதி, அணைக்கட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். 'ஹரிணி கிடைக்கிற வரை இந்த இடத்தை விட்டுப் போகமாட்டோம்' என்று அங்கேயே தங்கி இருக்கிறார்கள். காளியம்மாள் கர்ப்பிணியாக உள்ளதால், அவர் உணவு சாப்பிடாமல் அல்லாடி வருவது வயிற்றில் உள்ள குழந்தையையும் பாதிக்கும் என்று வெங்கடேசன் பதறி வருகிறார்.

இந்த நிலையில், கரூரைச் சேர்ந்த `இணைந்த கைகள்' என்ற சமூக அமைப்பு, 'ஹரிணியைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு' என்று அறிவித்தனர். அதைச் சமூக வலைதளங்களில் பரப்புவதோடு, மாவட்டவாரியாக அதை நோட்டீஸாக அச்சடித்து விநியோகித்து வருகிறார்கள். இந்தத் தகவல்கள் அனைத்தையும் விகடன் இணையதளம்தான் தொடர்ந்து செய்தியாகப் பதிந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை நான்கு தனிப்படைகள் அமைத்து ஹரிணியைத் தேடி வருகிறார்கள். இதற்கிடையில், ரஜினி ரசிகர்கள் வேறு சமூக வலைதளங்கள் மூலம் ஹரிணியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். கோவையில் ராஜம் என்ற பெயரில் மூன்று பேருந்துகளை இயக்கும் டிரான்ஸ்போர்ட் முதலாளி அருண் என்பவர், ``ஹரிணியைக் கண்டுபிடித்து தருபவர்கள் எங்கள் பேருந்துகளில் 5 வருடங்கள் இலவசமாகப் பயணிக்கலாம்" என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இப்படி பலரும் ஹரிணியைக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துக்கொண்டிருக்க, ``ஹரிணி பாப்பா போல் ஒரு குழந்தையை இப்பதான் தர்மபுரி பேருந்துநிலையத்தில் பார்த்தோம்'' என்று ஒரே நாளில் மூன்று பேரிடம் இருந்து காவல்துறைக்கு போன் வந்திருக்கிறது.சலீம்
 

இதுபற்றி, நம்மிடம் பேசிய இணைந்த கைகள் அமைப்பைச் சேர்ந்த சலீம், ``தினமும் எங்களுக்கும் காவல்துறைக்கும் ஹரிணி பற்றி தகவல் சொல்லி நூற்றுக்கணக்கான போன்கால்கள் வருகின்றன. அதில் நம்பகத்தன்மை இருக்கும் போன்கால்களுக்குதான் போலீஸார் ரெஸ்பான்ஸ் பண்ணி நேரடியாக ஹரிணியை தேடப் போறாங்க. அப்படிதான் தர்மபுரியில் இருந்து மூன்று கால்கள் வரவும், உடனே காஞ்சிபுரம் தனிப்படை அங்கே விரைந்தது. போன் வந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி வீடியோ புட்டேஜ்களை அலசி ஆராய்ந்திருக்கிறது. ஆனால், ஹரிணி சாயலில் குழந்தை இருந்ததேயொழிய, ஹரிணி கிடைக்கவில்லை. இருந்தாலும் தர்மபுரி மாவட்ட போலீஸாரையும் முடுக்கிவிட்டு அங்கே ஹரிணியைத் தேடி வருகிறார்கள். இதற்கிடையில், எங்கள் அமைப்பு தமிழ்நாடு முழுக்க அனைத்துப் பேருந்து நிலையங்கள், கோயில்கள், தியேட்டர்கள், திருமண மண்டபங்கள் என்று மக்கள் கூடும் இடங்களில் ஹரிணி பற்றிய தகவல்கள் அடங்கிய நோட்டீஸ்களை கொடுத்துக்கிட்டு இருக்கிறோம். எப்படியும் ஹரிணியை மீட்டே தீருவது என்பதில் காவல்துறையைப் போல் நாங்களும் உறுதியா இருக்கிறோம். மறுபடியும் நினைவுபடுத்துகிறோம். ஹரிணி பாப்பாவைக் கண்டுபிடித்துக் கொடுத்தாலோ, துப்புக் கொடுத்தாலோ அவர்களுக்கு எங்கள் அமைப்பு ஒருலட்சம் ரூபாய் பரிசு தர இருக்கிறது" என்றார்.