வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (31/10/2018)

கடைசி தொடர்பு:11:40 (31/10/2018)

அக்டோபர் மாதத்துக்கான மதுபாட்டில்கள் எங்கே? - மறியலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவத்தினர்

அக்டோபர் மாதத்துக்கான மதுபாட்டில்கள் வழங்கப்படாததால் முன்னாள் ராணுவத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே ராணுவ ஆள் சேர்ப்பு மையம் உள்ளது. இங்குள்ள கேன்டீனில் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு சலுகை விலையில் மளிகைப் பொருள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள்  வழங்கப்படுகின்றன. மேலும், ஒரு மாதத்துக்குக் குறிப்பிட்ட அளவு மது பாட்டில்களும் வழங்கப்படுவது வழக்கம். இந்த கேன்டீனில் திருச்சி மட்டுமல்லாது தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் பொருள்களை வாங்குவது வழக்கம்.

முன்னாள் ராணுவத்தினர் மறியல்

இந்த நிலையில், அக்டோபர் மாதத்துக்கான இறுதி நாளான இன்று வரை மதுபாட்டில்கள் யாருக்கும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டுகிறார்கள் முன்னாள் ராணுவ வீரர்கள். ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் கலப்படமில்லாத மது பாட்டில்கள் என்பதால் வெளி மார்க்கெட்டில் மவுசு அதிகம் என்றும் கூறப்படுகிறது. அதனால் இந்த மதுபாட்டில்களைக் கூடுதல் விலைக்கு வெளிமார்க்கெட்டுகளில் விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டுகளும் உள்ளது. இனிமேல் தினமும் கேன்டீனுக்கு வந்து மதுபாட்டில்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிய முன்னாள் ராணுவ வீரர்களிடம், ராணுவ கேன்டீன் மேலாளர் கணேசன், ``இந்த மாதத்துக்கான மதுபாட்டில்கள் இதுவரை வரவில்லை. இங்கு வேலை செய்வதால் சொந்த காசில் மதுபாட்டில் வாங்கியா தரமுடியும் என்று ஆவேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆத்திரமடைந்த முன்னாள் ராணுவ வீரர்கள், தங்களது குடும்பம் சகிதமாக நேற்று காலை சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த உதவி ஆணையர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் திருச்சியில் ராணுவ கமாண்டர் வீரர் சங்கத்தின் மேலாளர் கணேசன் உள்ளிட்டோர் மது பாட்டில்கள் இன்றைக்குள் வந்துவிடும் அப்படி வரும் மது பாட்டில்களை 5-ம் தேதிக்குள் கொடுத்துவிடுவோம் என்று கூறினார்கள். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் ராணுவத்தினர், `நாளை வரும் மதுபாட்டில்கள் அடுத்த நவம்பர் மாதத்துக்கானது. ஆனால், நாங்கள் இந்த மாதத்துக்கான மதுபாட்டில்களை கேட்கிறோம். தமிழகத்தில் மற்ற பகுதிகளில் உள்ள ராணுவ கேன்டீன்களில் இந்த மாதத்துக்கான மதுபாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், திருச்சி கேன்டீனில் மட்டும் மதுபாட்டில்கள் வழங்கப்படவில்லை. அந்த மது பாட்டில்கள் எங்கே போனது. இதுபற்றி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்கள். போலீஸார் மற்றும் ராணுவ கமாண்டர் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் முன்னாள் ராணுவ வீரர்கள் கலைந்து சென்றனர்.

நம்மிடம் பேசிய முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், ``ஆறு மாவட்டத்துக்கு திருச்சி கேன்டீன் தான் மையம். எல்லா மாவட்டத்திலும் இருக்குற முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இங்குதான் மதுபாட்டில்கள் வழங்கப்படுகின்றன. ஒரு ராணுவ வீரருக்கு அதிகபட்சமாக 10 மதுபாட்டில்களும், குறைந்தபட்சம் மூன்று மதுபாட்டில்கள் வரை வழங்கப்படும். மாதத்தில் 10 மற்றும் 20-ம் தேதிகளில் அந்த மதுபாட்டில்கள் வழங்கப்படுவது வழக்கம். அப்படி வழங்கும்போது, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்ற மாவட்டங்களிலிருந்து திருச்சி வந்து போக ஒருநாள் ஆகிவிடுகிறது. அதிகாலை 5 மணிக்கு வந்தால் மதியத்துக்கு மேல் டோக்கன் கொடுப்பார்கள். அதன்பிறகு மதுபாட்டில்களை வாங்க மாலை 5 மணி வரை காத்திருக்க வேண்டி உள்ளது. அப்படிக் காத்திருக்க பல வயதானவர்களால் முடியவில்லை. அதனால் குறிப்பிட்ட தேதிகளில் மதுபாட்டில்கள் வாங்க முடியாமல் போய்விடுகிறது. குறிப்பாக இந்த மாதம் நாங்கள் பலமுறை நேரில் வந்து அலைந்து விட்டோம். ஆனால், இதுவரை எங்களுக்கு மதுபாட்டில்கள் கிடைக்கவில்லை. எங்களுக்கு வழங்கப்படும் மதுபாட்டில்கள் முறையாகக் கணக்கு வைக்கப்படும். 31-ம் தேதி முடிந்தால் தானாக அந்தக் கணக்கு பட்டியல் அழிந்துவிடும். இப்படி இருக்க இந்த அதிகாரிகள் எங்களுக்கு வழங்கவேண்டிய மதுபாட்டில்களை, நவம்பர் 5-ம் தேதிக்குள் வழங்குவதாகக் கூறுவது விஷயத்தை மூடி மறைக்கும் செயல். நேற்றைய போராட்டத்தின்போது உத்தரவாதம் அளித்தபடி இன்று மாலைக்குள் மது பாட்டில்கள் வழங்கவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுப்போம்" என்றார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க