வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (31/10/2018)

கடைசி தொடர்பு:13:35 (31/10/2018)

`` பட்டேல் சிலையில் தமிழ் பிழை... என்ன நடந்தது? ’’ - தமிழக பா.ஜ.க விளக்கம்

லகின் மிக உயரமான சிலை என்ற பெருமிதத்தோடு சர்தார் வல்லபபாய் படேல் சிலையைத் திறந்து வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ` சிலையின் முகப்பில் தமிழ் மொழி தவறாக எழுதப்பட்டிருக்கிறது. இதை சரிசெய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். 

படேல் சிலையில் தமிழ்

குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே கெவாடியா என்ற கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலை. சீனாவில் உள்ள 153  அடி உயரம் கொண்ட புத்தர் சிலையே, இதுவரையில் மிக உயரமான சிலையாகப் பார்க்கப்பட்டு வந்தது. அதையும் மிஞ்சக் கூடிய வகையில், 182 மீட்டர் உயரத்தில் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலைக்கு `ஒற்றுமையின் சிலை' என்றும் பெயர் சூட்டியிருக்கிறது மத்திய அரசு. இதையே ஆங்கிலத்தில் ` ஸ்டாட்ச்யூ ஆஃப் யூனிட்டி' என்கின்றனர். இந்த வார்த்தைகளை மொழி வானதி சீனிவாசன்பெயர்த்ததுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலம் உள்பட பத்து மொழிகளில் ஒற்றுமையின் சிலை என்பதை மொழி பெயர்த்துள்ளனர்.

இதில், தமிழ் மொழிபெயர்ப்பு மிக மோசமாக அமைந்துவிட்டது. ` ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி' எனத் தவறாக மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். இந்தச் செயலுக்குக் கடுமையான கண்டனங்கள் கிளம்பியதையடுத்து, தமிழ் மொழிபெயர்ப்பின் மீது வண்ணம் அடித்து, தற்காலிகமாக மறைத்து உள்ளனர். ` இப்படியொரு உயரமான சிலையில் தமிழை மிக மோசமாக மொழிபெயர்ப்பு செய்ததை ஏற்க முடியாது' என சமூக வலைத்தளங்களில் கண்டனம் கிளம்பியுள்ளது. 

இதுகுறித்து, தமிழக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினோம். `` தமிழ் மொழி தவறாக எழுதப்பட்டுள்ளது குறித்து மத்திய ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளேன். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருக்கிறார். இத்தனை மொழிகள் இருக்கக் கூடிய நாட்டில், ஒவ்வொருவரும் அந்தந்த மொழிகளில் தேர்ந்த புலமையோடு இருப்பார்கள் என்று கூற முடியாது. தமிழ் மொழி தவறாக எழுதப்பட்டுவிட்டதைப் பார்க்கிறோம். மற்ற மொழிகளும் தவறாக எழுதப்பட்டிருக்கலாம். இதைப் பெரிதுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த விவகாரத்தில் எந்தவித அரசியலும் இல்லை. மனித தவறு என்பது இயல்பானதுதான். மொழியைக் கேவலப்படுத்துவதற்காக செய்தார்கள் என்பது தவறான தகவல். இதை சரிசெய்யக் கூடிய முயற்சியில் இறங்கியிருக்கிறோம்" என்றார்.