வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (31/10/2018)

கடைசி தொடர்பு:11:31 (31/10/2018)

`அப்பீல் இல்லை; இடைத்தேர்தலை சந்திக்கிறோம்'! - டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

``இடைத்தேர்தலைக் கண்டு எங்களுக்குப் பயம் இல்லை. 20 தொகுதிகளுக்கும் வர இருக்கும் இடைத்தேர்தலை சந்திக்கத் தயார். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். 

தினகரன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் ஆளுநரைச் சந்தித்து மனு அளித்ததால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களின் தகுதி நீக்கம் செல்லும் என சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் 18 பேரும் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மேல்முறையீடு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.  

அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ``20 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் யார் மண் குதிரை எனத் தெரிந்துவிடும். இந்த வருடம் 4000 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்தால் மட்டுமே தங்களுக்கு வாழ்வாதாரம் எனப் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொலைக்காட்சிகளில் தெரிவித்ததைப் பார்த்தேன். வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கினால் கிராமப்புறங்களில் உள்ள உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த வருடம் மட்டும் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள். இதைத் தமிழக அரசு கவனத்தில் கொண்டு இந்த ஒரு வருடத்துக்கு மட்டும் நேரத்தை அதிகரிக்க மத்திய அரசிடமும் உச்சநீதிமன்றத்திலும் வேண்டுகோள் விடுக்க வேண்டும். டெண்டர் வழக்கில் மின்னல் வேகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்பீல் செய்ததுபோல, இந்த வழக்கிலும் துரிதகதியில் செயல்பட வேண்டும். தீபாவளி கொண்டாடுவோரின் உணர்வுகளை மதிக்க வேண்டும் 

நாங்கள் முன்னதாகவே 20 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்துவிட்டோம். எப்போதும் தேர்தல் வந்தாலும் நாங்கள் சந்திக்கத் தயாராகவுள்ளோம். தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை. 20 தொகுதிகளிலும் அவர்கள் டெபாசிட் கூடப் பெறமாட்டார்கள் என்பது மக்கள் எங்களுக்கு அளித்துள்ள தீபாவளிப் பரிசு. ஆர்.கே.நகர் தேர்தலைப்போலவே 20 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேலை செய்தார்கள். ஆனால், மக்கள் அவர்களுக்குத் தோல்வியைத்தான் கொடுத்தார்கள். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திவிட்டு, இடைத்தேர்தல் வேண்டாம் என்று தலைமைச் செயலாளரை விட்டுத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியதுதான் இவர்கள் இருவரின் வீரம். இந்தத் தடவையாவது சாக்குப் போக்கு சொல்லாமல் இடைத்தேர்தலை நடத்துங்கள். நாங்கள் ரெடி' என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க