வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (31/10/2018)

கடைசி தொடர்பு:16:06 (31/10/2018)

வைரலாகி கொண்டாடப்பட்ட புகைப்படம்... பெண் காவலர்களின் சிரமங்கள் என்னென்ன?

கணவரும், முதல் மகளும் ஆக்ராவில் தனியாக வசிப்பதாகவும், என் குழந்தைகளைப் போலவே எனக்கு என் யூனிஃபார்மும், வேலையும் முக்கியமானது என்று என்.டி.டி.வி தொலைக்காட்சியின் செய்தியாளரிடம் சொல்லியிருந்தார் அர்ச்சனா.

வைரலாகி கொண்டாடப்பட்ட புகைப்படம்... பெண் காவலர்களின் சிரமங்கள் என்னென்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி நகரத்தில் கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் அர்ச்சனா ஜெயந்த்தை, சமூக வலைதளங்கள் கொண்டாடித்தீர்க்கின்றன. தனது ஆறு மாத குழந்தையை மேசை மீது படுக்கவைத்துவிட்டு, காவல்நிலையத்தில் அமர்ந்து பணிபுரிந்துகொண்டிருந்த அவரது புகைப்படம், சமூக வலைதளங்களில் கொண்டாடப்படுகிறது.

புகைப்படம் வைரலான சில நிமிடத்தில், அர்ச்சனாவை `21-ம் நூற்றாண்டின் இணையற்ற பெண்' என்று புகழ்ந்த உத்தரப்பிரதேச காவல்துறை டிஜிபி ஓம் பிரகாஷ் சிங், அர்ச்சனாவின் சொந்த ஊரான ஆக்ராவுக்கே அவரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். `கணவரும் முதல் மகளும் ஆக்ராவில் தனியாக வசிக்கின்றனர். என் குழந்தைகளைப்போலவே எனக்கு என் யூனிஃபார்மும் வேலையும் முக்கியமானது' என்று என்.டி டிவி தொலைக்காட்சியின் செய்தியாளரிடம் சொல்லியிருந்தார் அர்ச்சனா. இவருக்குக் கிடைத்த இந்த இடமாற்ற உத்தரவு, புது நம்பிக்கையையும் அவரது வேலைக்கான கூடுதல் உற்சாகத்தையும் அளித்திருக்கக்கூடும்.

பெண் போலீஸ்

சமூக வலைதளங்கள், சில சமயங்களில் இப்படியான அற்புதங்களை நிகழ்த்திவிடக்கூடியவைதாம். அர்ச்சனாவின் பேட்டி, அவருக்குக் கிடைத்திருக்கும் நியாயமான பணி இடமாற்றம் ஆகியவற்றைக் குறித்து நினைத்துக்கொண்டிருந்தபோதே, தேவர் ஜயந்தி மாலை அணிவிப்பு விழாவுக்கு அண்ணா மேம்பாலம் முழுக்க வரிசையாக நிற்கவைக்கப்பட்டிருந்த பெண் போலீஸார்களைப் பார்க்க நேர்ந்தது. காலையிலிருந்து மாலை வரை, மாலை முதல் அடுத்த நாள் காலை வரை என, காவலுக்கு நிற்கும் அவர்களது கதைகளை, பல்வேறு சமயங்களில் கேட்டிருக்கிறேன்.

திருவண்ணாமலை கிரிவலமோ, அரசியல் மாநாடோ, பேரணி, இயற்கைப் பேரிடர் காலமோ, ஜல்லிக்கட்டுப் போராட்டமோ, அவர்களது துயர்மிகுந்த கதைகளையும் அத்தனை சமயங்களிலும் அவர்கள் பேசிக்கொண்டார்கள் அவர்களுக்குள்ளாகவே! நாப்கின் மாற்றுவதற்கும், சிறுநீர் கழிப்பதற்கும் இடம் தேடி ஓடுவது தொடங்கி, வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு வரை அத்தனை பேரும் அனுபவித்திருக்கக்கூடிய பொதுவான பிரச்னைகளின் பட்டியல் நீள்கிறது.

கடந்த மாதம் ஒரு சனிக்கிழமை அதிகாலையில் நடந்த துயரம், பலருக்கும் நினைவிருக்கலாம். பிறந்து ஒன்றரை மாதமே ஆன குழந்தையைக் குளத்தில் வீசியெறிந்த உமாதான் அன்றைய பேசுபொருள். தாய்ப்பால் கொடுக்கும்போது மிக அதிகமாக வலி ஏற்படவே, அதற்காக வலி நிவாரணியைக் கேட்டபோதும்தான் தொடங்கியிருக்கிறது அந்தப் பிரச்னை. குழந்தைப் பிறப்புக்குப் பிறகான Postpartum Depression பற்றி, மிகக் குறைவான விழிப்புஉணர்வே இருக்கும் இன்றைய நிலையில், தேவையான எல்லாமும் விவாதிக்கப்படுகின்றனவா... பரிசீலிக்கப்படுகிறதா என்பதே முதன்மையான கேள்வி.

சென்னையில் இருக்கும் Schizophrenia ஆய்வு மையத்தின் மருத்துவர் மங்களாவிடம் இதைப் பற்றிப் பேசியபோது, ``பிரசவ நேரத்தின்போதும் பிரசவத்துக்குப் பிறகும் ஏற்படும் இந்த PPD பற்றிய புரிதல் வளர்ந்த நகரங்களிலேயே மிகக் குறைவாக இருக்கிறது. அலுவலக வேலையையும், குழந்தைப் பிறப்பின் புதிய சூழலையும் சேர்த்துச் சமாளிக்கும் பெண்களுக்கு, இந்த டிப்ரெஷன் இருப்பதை அறிந்துகொள்வதேகூட சவாலானதுதான். குடும்பத்தின் ஆதரவையே முக்கியமாக உணர்த்திக்கொண்டிருப்பது இதற்காகத்தான். முதல் பிரசவத்தையும், மன/உடல் போராட்டங்களையும் சந்தித்துக்கொண்டிருக்கும் பெண்ணுக்கு, வேறு எந்தக் குற்ற உணர்வையும் சுமையையும் சேர்த்துச் சுமத்தினால், அது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்” என்றார்.

வைரலான அர்ச்சனா ஜெயந்த்தின் புகைப்படத்தால் அவருக்குக் கிடைத்த இடமாற்றத்துடன், மற்றொரு நேர்மறையான முன்னெடுப்பும் நிகழ்ந்திருக்கிறது. ``மாவட்டத்தின் 350 பெண் காவலர்களில் 100 பேருக்குச் சிறு குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களுக்குத் தங்களின் பணியிடத்திலேயே க்ரீச்(பராமரிப்பிடம்) அமைப்பது குறித்து பரிசீலிக்க முயற்சிகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார் ஜான்சியின் காவல்துறை ஆணையர் வினோத் குமார் சிங்.

தீர்வுகளுக்காக உழைப்போம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்