வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (31/10/2018)

கடைசி தொடர்பு:13:50 (31/10/2018)

`ஹரிணி சீக்கிரம் கிடைப்பா; பெற்றோர் மனம் குளிரும்!' - ஃப்ளெக்ஸ் வைத்து தேடும் இஸ்லாமியப் பெண்

`காணாமல் போன ஹரிணியைக் கண்டுபிடித்தால் ஒரு லட்சம் பரிசு!' என்ற தகவலை ஃப்ளெக்ஸ் போர்டாக அடித்து தனது கிராமத்தில் வைத்திருக்கிறார் இஸ்லாமிய பெண் காமிலா.

ஃப்ளெக்ஸ் வைத்து ஹரிணியை தேடும் இஸ்லாமிய பெண்

காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இனத் தம்பதியான வெங்கடேசன், காளியம்மாளின் இரண்டு வயது மகள்தான் ஹரிணி. கடந்த மாதம் 15-ம் தேதி பாசி மணிகள் விற்க போன அவர்கள் அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கினர். நடுராத்திரியில ஹரிணி காணாமல் போக, பதறிப்போன அந்தத் தம்பதி, அணைக்கட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். 'ஹரிணி கிடைக்கிற வரை இந்த இடத்தை விட்டு போகமாட்டோம்' என்று அங்கேயே தங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில், கரூரைச் சேர்ந்த 'இணைந்த கைகள்' என்ற சமூக அமைப்பு, 'ஹரிணியைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு' என்று அறிவித்தனர். அதை சமூக வலைதளங்களில் பரப்புவதோடு, மாவட்டவாரியாக அதை நோட்டீஸாக அச்சடித்து விநியோகித்து வருகிறார்கள். இந்தத் தகவல்கள் அனைத்தையும் விகடன் இணையதளம்தான் தொடர்ந்து செய்தியாக வெளியிட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை நான்கு தனிப்படைகள் அமைத்து ஹரிணியைத் தேடி வருகிறார்கள். இதற்கிடையில், ரஜினி ரசிகர்கள் வேறு சமூக வலைதளங்கள் மூலம் ஹரிணியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். கோவையில் ராஜம் என்ற பெயரில் மூன்று பேருந்துகளை இயக்கும் பேருந்து டிரான்ஸ்போர்ட் முதலாளி அருண் என்பவர், ``ஹரிணியைக் கண்டுபிடித்து தருபவர்கள் எங்கள் பேருந்துகளில் 5 வருடங்கள் இலவசமாக பயணிக்கலாம்" என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இப்படி பலரும் ஹரிணியைக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துக்கொண்டிருக்க, 'ஹரிணியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு!' என்ற இணைந்த கைகள் அமைப்பின் அறிவிப்பை வாசகங்களாக்கி அதை ஃப்ளெக்ஸாக அச்சடித்து தனது கிராமத்தில் வைத்திருக்கிறார் காமிலா என்ற இஸ்லாமியப் பெண்.

கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சிதான் அவருக்குச் சொந்த ஊர். இதுபற்றி, நம்மிடம் பேசிய காமிலா,
``நான் ஊர்ல சின்னதா சமீராங்கிற பெயர்ல சமையல் பொடிகளை தயார் பண்ணி விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன். விகடன் இணையதள வாசகி நான். அதுலதான் காஞ்சிபுரம் ஹரிணி பாப்பா காணாமல் போன செய்தியை தொடர்ச்சியா படிச்சுக்கிட்டு வர்றேன். அதை முதல்முறை படிச்சப்பவே என் மனசு கலங்கிப் போச்சு. 'எப்படியாச்சும் அந்தப் பாப்பா கிடைக்கணும்'ன்னு அல்லாவை வேண்டிக்கிட்டேன். அருகில் உள்ள தர்காவுக்குகூட போய் ஹரிணி கிடைக்கணும்ன்னு தொழுகை நடத்தினேன். அவளைக் கண்டுபிடிக்க என்னாலான சின்ன முயற்சியா அவளைப் பற்றிய தகவல்களை ஃபேஸ்புக், வாட்ஸ்அப்புகளில் பரப்பினேன். இப்போ ஃப்ளெக்ஸ் போர்டா அடிச்சு எங்க ஊர்ல வச்சுருக்கேன். இதுபோல் ஒவ்வொருவரும் இப்படி ஹரிணி பற்றி மத்தவங்களுக்கு தங்களால் முடிந்த வகையில் தகவல் பரப்பணும். அப்பதான் ஹரிணி சீக்கிரம் கிடைப்பா. பரிதவித்துக் கிடக்கும் ஹரிணி பெற்றோர் மனம் குளிர்வார்கள்" என்றார்.