வெளியிடப்பட்ட நேரம்: 14:34 (31/10/2018)

கடைசி தொடர்பு:14:34 (31/10/2018)

நிர்மலாதேவியின் வாக்குமூலம் எப்படி வெளியாகி இருக்கும்? - சி.பி.சி.ஐ.டி-யின் 3 கணிப்புகள்

நிர்மலாதேவி

அருப்புக்கோட்டை கல்லூரியில் பயின்ற மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைதான நிர்மலாதேவியின் வாக்குமூலம் வெளியானது எப்படி என்று விசாரணை நடப்பதாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு எந்தளவுக்கு பரபரப்பாக பேசப்பட்டதோ அதே வேகத்தில் பிசுபிசுத்துப்போய் உள்ளது. இந்த வழக்கை ஆரம்பத்தில் மின்னல் வேகத்தில் விசாரித்த அதிகாரிகள், சில காரணங்களால் சோர்ந்துபோய் உள்ளனர். நிர்மலாதேவி, முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, உதவி பேராசிரியர் முருகன் ஆகியோருடன் இந்த வழக்கின் விசாரணை முடித்துக்கொள்ளும் முடிவில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் உள்ளனர். இதனால் விசாரணை குறித்த தகவல்களை வெளியில் தெரியாமல் கவனமாக பார்த்துக்கொண்ட சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு சமீபத்தில் வெளியான நிர்மலா தேவியின் வாக்குமூலம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்மலாதேவியின் நீண்ட வாக்குமூலம் எப்படி வெளியானது என்பதுதான் சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் கேள்வியாக உள்ளது. அதுதொடர்பாக நிர்மலாதேவி வழக்கை விசாரித்த போலீஸாரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, வாக்குமூலம் வெளியானதற்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்படியென்றால் நம்மிடம் உள்ள வாக்குமூல விவரங்கள் எப்படி வெளியானது என்ற கேள்வியை சி.பி.சி.ஐ.டி உயரதிகாரி கேட்டுள்ளார். `அதுதொடர்பாக விசாரித்து உடனடியாக எனக்கு ரிப்போர்ட் கொடுங்கள்' என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் நிர்மலாதேவி வழக்கை விசாரித்த அதிகாரிகள், வாக்குமூலம் வெளியானது எப்படி என்று விசாரணையிலும் களமிறங்கியுள்ளனர். `நிர்மலாதேவியின் வாக்குமூலம் வெளியானது எப்படி' என்ற கேள்வியை சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, `அதுதொடர்பாகதான் விசாரணை நடத்திவருகிறோம்' என்றார்.

தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீஸில் உள்ள சில உயரதிகாரிகளிடம் பேசினோம். ``நிர்மலா தேவியின் வாக்குமூலம் என்பது இந்த வழக்கின் முக்கிய ஆதாரம். அது, எப்படி வெளியானது என்று தெரியவில்லை. இருப்பிலும் மூன்று வகையில் இந்த வாக்குமூலம் வெளியாக வாய்ப்புள்ளது. ஒன்று சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் உள்ளவர்கள் கொடுத்திருக்க வேண்டும். அடுத்தது நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்த ஆவணத்திலிருந்து தகவல்கள் பெறப்பட்டிருக்கும். மூன்றாவது, வழக்கறிஞர்கள் மூலம் வெளியாகியிருக்கும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். சி.பி.சி.ஐ.டி போலீஸார் மூலம் வெளியாகியிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நிர்மலாதேவியின் வாக்குமூலத்தில் யாருக்காக மாணவிகளை அழைத்தேன் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார். நிர்மலாதேவி கொடுத்த தகவலின்படிதான் எங்களின் விசாரணை நடந்தது. கருப்பசாமி, முருகன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலத்தை பெற்றுள்ளோம். அவர்களும் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளனர். அதை இப்போது வெளியில் சொல்ல முடியாது. ஏனெனில் வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது பாதுகாப்பாக இருக்கவேண்டிய வாக்குமூலம் போன்ற தகவல்கள் வெளியில் தெரிந்தால் அது, வழக்கின் விசாரணையிலும் சிக்கலை ஏற்படுத்தும். நாங்கள் கைது செய்தவர்கள் தப்பிக்ககூட வாய்ப்புள்ளது. இதனால்தான் நிர்மலாதேவியின் வழக்கின் விசாரணையை ரகசியமாக வைத்திருந்தோம். ஆனால், அது தற்போது வெட்ட வெளிச்சமாகியிருப்பது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. இருப்பினும் இந்த வழக்கில் கைதானவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க தேவையான ஆதாரங்கள், சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். குற்றப்பத்திரிகைகளில் பல முக்கிய தகவல்கள் உள்ளன. அது, வெளியாகிவிடக்கூடாது என்பதில் உயரதிகாரிகள் கவனமாக இருக்கின்றனர். இதுதொடர்பாக உயரதிகாரிகள் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, இனி நிர்மலாதேவி வாக்குமூலம்போல கருப்பசாமி, முருகன் ஆகியோரின் வாக்குமூலம் வெளியாக வாய்ப்பில்லை'' என்றனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவி ஜாமீனில் வெளியில் வருவதற்கே நாங்கள் ஆட்சேபனை செய்துவரும்போது அவரின் வாக்குமூலத்தை வெளியிடுவோமா என்ற கேள்வியை எழுப்புகின்றனர் சி.பி.சி.ஐ.டி உயரதிகாரிகள். ஆனால், அதையும் மீறி வாக்குமூலம் வெளியாகியிருப்பது மேலிட செல்வாக்கே காரணம் என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.

அதிகாரிகள் மீது சந்தேகம் 

சேலம் சென்னை ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் துப்பு துலங்காத கவலையில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் இருந்தனர். அப்போது தொழிற்நுட்ப உதவியை சரியாக பயன்படுத்தி இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு குற்றவாளிகளைக் கண்டுபிடித்தார் அதிகாரி ஒருவர். அந்தத் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி-யில் முக்கியப் பதவியில் இருந்த ஒருவர் இடமாற்றப்பட்டார். அவர் இடமாறியப்பிறகு ரயில் கொள்ளை வழக்கின் ரகசியம் உடைக்கப்பட்டது. இதனால் இரவு, பகல் என பாராமல் உழைத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் விரக்தியடைந்தனர். இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரயில் கொள்ளையர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளளனர். அதுபோன்ற அதிகாரிகள்தான் நிர்மலாதேவியின் வாக்குமூலத்தையும் வெளியில் தெரிவித்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வட்டமடிக்கிறது.