``காய்ச்சல் பாதிப்புகளை கட்டுக்குள் வைப்போம்" நம்பிக்கை தரும் அரசு... உண்மை நிலவரம் என்ன? | dengue and swineflu effects and the steps taken by the government

வெளியிடப்பட்ட நேரம்: 15:34 (31/10/2018)

கடைசி தொடர்பு:10:49 (01/11/2018)

``காய்ச்சல் பாதிப்புகளை கட்டுக்குள் வைப்போம்" நம்பிக்கை தரும் அரசு... உண்மை நிலவரம் என்ன?

"கொசு உற்பத்தியாகும் வகையிலான சூழலை ஏற்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது."

``காய்ச்சல் பாதிப்புகளை கட்டுக்குள் வைப்போம்

மிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவி வருவது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கும், பன்றிக்காய்ச்சலுக்கும் தமிழகத்தில் பலர் பாதிக்கப்பட்டிருப்பதுடன் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் இத்தகைய காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. இந்த மாதம் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 4 குழந்தைகளும், பன்றிக் காய்ச்சலுக்கு 7 பேரும் பலியாகியுள்ளனர். 

தமிழகம் முழுவதும் நானூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்கு, பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உடனடி நடவடிக்கையாக, உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் டெங்கு, பன்றிக்காய்ச்சலை ஒழிக்க சுகாதாரத்துறை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். டெங்கு காய்ச்சலைவிட பன்றிக்காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. தனிமனித சுகாதாரத்தைப் பேணுவதன் வாயிலாகப் பன்றிக்காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க முடியும் எனப் பொதுசுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 

தருமபுரி மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். `டெங்கு காய்ச்சலாக இருக்குமோ?' என அஞ்சுகின்றனர் அப்பகுதி மக்கள். இந்த மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் பலர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் மணியிடம் பேசினோம், ``மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல், இன்ஃபுளுயென்சா வைரஸால் ஏற்படும் தொற்று நோயாகும். இதன் அறிகுறியாக அதிகக் காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் போன்றவை இருக்கும். இருமும்போதும், தும்மினாலும் வெளியேறும் நுண்ணிய துகள்களிலிருந்து காற்றின் மூலம், இந்த வைரஸ் மற்றவர்களுக்கும் பரவுகிறது. மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உட்பட மக்கள் அதிகப்படியாகக் கூடும் இடங்களில் இத்தகைய காய்ச்சல் எளிதாகப் பரவ வாய்ப்பிருக்கிறது. `டாமி ஃபுளூ' தடுப்பு மாத்திரை, சுயபாதுகாப்பு சாதனங்கள் மாவட்ட அளவில் தயாராக உள்ளன. சளி, காய்ச்சல், தொண்டை வலி இருக்கும்பட்சத்தில் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும்.

டெங்கு, பன்றிக்காய்ச்சல்

அடிக்கடி சோப்புப் போட்டு கைகளைக் கழுவ வேண்டும். மேலும், சளியுடன் மெல்லிய உடல் உஷ்ணம், லேசான தொண்டை வலி, வாந்தி வயிற்றுப்போக்கு ஆகியவை இருந்தால் மருத்துவரை உடனே அணுகி புறநோயாளியாக சிகிச்சைப் பெற்று, வீட்டில் தனியாக ஓய்வெடுக்க வேண்டும். குறிப்பிட்ட அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி `டாமி ஃபுளு' மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மயக்கம், ரத்த அழுத்தம் இருந்தால் கட்டாயம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். தாமதமாக சிகிச்சையைத் தொடங்கினால் பாதிப்பு அதிகரித்து நுரையீரல் செயலிழந்து உயிரிழப்பு ஏற்படலாம். பன்றிக்காய்ச்சலைத் தடுக்க தடுப்பூசி, மூக்கில் மருந்தைச் செலுத்தும் `ஸ்ப்ரே' மற்றும் `டாமிஃபுளு' மாத்திரைகள் உள்ளன. பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் மற்றவர்களுக்கு நோய் பரவுவதைத் தடுக்க `ஃபேஸ் மாஸ்க்' பயன்படுத்த வேண்டும். தும்மும்போதும், இருமும்போதும் கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும்" என்றார்.

``டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில் ஒரு சதவிகிதத்தினர் ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் குறைவால் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. வீட்டின் மொட்டை மாடிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். கொசு உற்பத்தியாகும் வகையிலான சூழலை ஏற்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சலை கை கழுவும் பழக்கத்தின் மூலமாக 80% வரை தடுக்க முடியும். தினமும் பத்து முறையாவது கைகளைக் கழுவ வேண்டும். பன்றிக்காய்ச்சலைத் தடுக்க 19 லட்சம் `டாமிஃபுளு' மாத்திரைகள், 50 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன." என மாநிலச் சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2017ல் டெங்கு காய்ச்சலால் 23,294 பேர் பாதிக்கப்பட்டனர். 65 பேர் உயிரிழந்தனர். பன்றிக்காய்ச்சலால் 2,000 பேர் பாதிக்கப்பட்டனர். 20 பேர் உயிரிழந்தனர். ஆனால், இந்த வருடம் எண்ணிக்கையைக் குறைப்போம் எனக் கூறிவருகிறது அரசு.


டிரெண்டிங் @ விகடன்