வெளியிடப்பட்ட நேரம்: 14:57 (31/10/2018)

கடைசி தொடர்பு:15:13 (31/10/2018)

தீபாவளி ஸ்வீட்ஸில் கலப்படம்... நெய்யில் செயற்கை நிறமிகள்..! - சென்னையில் பிடிபட்ட 1,000 கிலோ பொருள்கள்

தீபாவளிக்கு விற்பனை செய்வதற்காக காலாவதியான நெய் மற்றும் இனிப்புகளை ஆயிரம் கிலோ அளவுக்கு விற்பனை செய்தவர்களையும் கலப்படப் பொருள்கள் கொண்டு நெய் தயாரித்தவர்களையும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கலப்படப் பொருள்கள்

கல்லூரிகள், விடுதிகளில் மற்றும் கல்யாண மண்டபங்களில் அரசு அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களின் பெயரில் நெய் விற்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குத் தகவல்வர, சென்னையில் முக்கிய இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது அதிர்ச்சிகரமாக, இதுபோன்ற கலப்படங்கள் பெரும்பாலான வீடுகளில்தான் நடத்தப்படுவதாகத் தெரியவந்தன. இதையடுத்து, உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி கதிரவன் தலைமையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆறு குழுக்களாகப் பிரிந்து சோதனை நடத்தப்பட்டது. சென்னையில், பம்மல், கிண்டி, தி.நகர், கஸ்தூரி நகர், கண்ணம்மாபேட்டை உள்ளிட்டப் பல பகுதிகளில் அதிரடி சோதனை நடைபெற்றது. அப்போது காலாவதியான இனிப்புகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அதைக் கைப்பற்றிய அதிகாரிகள் மொத்தமான குப்பைக் கிடங்கில் கொட்டி அழித்தனர்.

 

கலப்பட பொருள்கள்

இதையடுத்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி கதிரவனைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர் கூறுகையில், ``கலப்படமாக நெய் தயாரிப்பதற்காக கொஞ்சமாக வெண்ணெய் மட்டும் வாங்கிக் கொண்டு, அதோடு வனஸ்பதி, காய்கறி எண்ணெய் மற்றும் சில நிறமிகளையும் பயன்படுத்திவந்திருக்கிறார்கள். இதைப் பயன்படுத்தும்போது உடலுக்கு கேடு விளைவிக்கும். சென்னையில் நெய் தயாரிக்கும் இவர்கள், சேலம் ஈரோடு என்று பொய்யான முகவரியைக் கொடுத்து இனிப்பு அட்டைகளைத் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். இந்தச் சோதனையில் மட்டும் சுமார் 1080 கிலோ நெய் மற்றும் இனிப்புகள் கைப்பற்றப்பட்டன. சோதனைக்குச் சென்ற இடங்களில் சேகரித்த மாதிரிகளைச் சோதனைக்காக அனுப்பி இருக்கிறோம். இதுபோன்று வீடுகளில் கலப்படமாகத் தயாரிக்கப்படுவது தெரிந்தால், 94440 42322 என்ற எண்ணில், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்'' என்றார்.