வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (31/10/2018)

கடைசி தொடர்பு:15:40 (31/10/2018)

`திருமணத்தைப் பதிய முடியாது!' - தடைப்போட்ட அதிகாரிகள்; நடத்திக்காட்டிய திருநங்கைகள்

தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோயிலில் திருநங்கைக்கும் ஆணுக்கும் நடந்த திருமணத்தைப் பதிவு செய்ய திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருமணக் கோலத்தில் ஸ்ரீஜா- அருண்குமார்

தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்தவர் அருண்குமார். 22 வயதான இவர் ரயில்வேயில் ஒப்பந்தத் தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஸ்ரீஜா. 20 வயதான இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அருண்குமாரும் ஸ்ரீஜாவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து பத்திரிகை அடித்து இன்று தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோயிலில் திருமணம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர். இந்த நிலையில், ``ஆணுக்கும் பெண்ணுக்கும்தான் திருமணம் பதிவு செய்ய முடியும்; ஆணுக்கும் திருநங்கைக்கும் திருமணம் பதிவு செய்ய முடியாது" என திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் கூறினர். இதைத் தொடர்ந்து திருநங்கைகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது. 

ஸ்ரீஜா- அருண்குமார்

இதுகுறித்து திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த திருநங்கைகள் கூறுகையில், ``திருநங்கைகள் திருமணம் செய்துகொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் திருமணம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம்கூட, சென்னையில் வடபழநி முருகன் கோயிலில் ”சைலு” என்ற திருநங்கைக்கும் செல்வமுருகன் என்ற ஆணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருநங்கைக்கும் ஆணுக்கும் திருமணம் நடத்தப் போகிறோம் என நேற்றே, நிர்வாக அலுவலகத்தில் தகவலைச் சொல்லித்தான் திருமணம் செய்ய வந்துள்ளோம். ஆனால், இன்று அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

அதிகாரிகள் மறுத்ததால், திருமணம் நடத்தி வைக்க குருக்கள்கூட வரத் தயங்குகிறார்கள். திருமணத்தை நடத்தி வைத்தே தீருவோம் என முடிவெடுத்து, கோயில் வளாகத்தில் உள்ள முருகன் சந்நிதி முன்பு பொண்ணு மாப்பிள்ளையை மாலை மாற்றச் சொல்லி, திருமாங்கல்யத்தை முருகப் பெருமானின் பாதத்தில் வைத்து எடுத்து தாலி எடுத்துக்கொடுத்து நாங்களே அர்ச்சனை சொல்லி கல்யாணம் செய்து வச்சுட்டோம். காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை உள்ள நல்ல நேரத்தில் தாலி கட்ட நினைத்தோம். அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் நேரம் ஆனதால் 11.15 மணிக்கு தாலி கட்டு நடைபெற்றது. 

ஸ்ரீஜா- அருண்குமாருடன் திருநங்கைகள்

சமூகத்தில் திருநங்கைகளுக்கான அங்கீகாரம் படிப்படியாக கிடைத்து வருகிறது. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருநங்கைகள் திருமணம் செய்துகொள்ளலாம் என அரசே அறிவித்துள்ள நிலையில், கோயிலில் திருமணம் செய்து வைக்க முடியாது என அதிகாரிகள் விரட்டியடிக்கிறார்கள். அதிகாரிகள் தடை போட்டாலும் நினைத்தபடி திருமணத்தை நடத்திக் காட்டினோம். இந்தத் திருமணம் எங்களுக்கு மனநிறைவாக உள்ளது” என்றனர்.

புதுமணத் தம்பதியிடம் பேசினோம், ``சமூக மாற்றத்தில் எங்களது திருமணம் ஓர் உதாரணம். திருநங்கைகள் நேசிக்கப்படக் கூடியவர்கள். எங்களால் குழந்தை மட்டும்தான் பெற்றுக்கொள்ள முடியாது. எனக்கு அவள் குழந்தை. அவளுக்கு நான் குழந்தை. எதிர்காலத்தில் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்போம்” என்றனர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் இந்தத் திருமணத்தை ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க