வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (31/10/2018)

கடைசி தொடர்பு:16:25 (31/10/2018)

`2 கிலோ நகை எங்கே?’ - சிக்கிய நெல்லை கொள்ளையனிடம் போலீஸ் கிடுக்கிப்பிடி

நெல்லையில் டவுனில் உள்ள நகைக்கடையின் பூட்டை உடைத்து 2 கிலோ தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் பதுக்கி வைத்துள்ள நகைகளை மீட்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. 

நகை கொள்ளை நடந்த கடை

நெல்லை கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நெல்லை டவுன் பகுதியில் காவல் நிலையம் எதிரே உள்ள செங்கோல் முடுக்கு தெருவில் நடைக்கடை வைத்துள்ளார். ஆர்டரின் பேரில் மொத்தமாக நகைகளைச் செய்து கொடுப்பதைக் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகச் செய்து வந்ததால், நம்பிக்கையின் அடிப்படையில் பல்வேறு சிறிய நகைக் கடைகளைச் சேர்ந்தவர்கள், தங்கத்தைக் கொடுத்து நகைகளைச் செய்து வாங்குவது வழக்கம். அந்த வகையில், இவரது கடையில் எப்போதுமே 2 கிலோ அளவுக்கான நகைகள் இருப்பது வழக்கம். இந்த நிலையில், அக்டோபர் 25-ம் தேதி அதிகாலை நேரத்தில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கடையின் முன்பக்கக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த 2 கிலோ நகைகளை அந்தக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. அதன் மதிப்பு ரூ.60 லட்சம் என மதிப்பிடப்பட்டது.

காவல் நிலையத்தின் வெகு அருகில் இருந்த கடையில், 2 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகக் கடையின் உரிமையாளர் மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளை நடந்த நகைக்கடையில் இருந்த சிசிடிவி-யை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை நேரத்தில் இரு பைக்குகளில் 6 பேர் வருவது தெரியவந்தது. ஆனால், அந்த கேமராவில் உருவங்கள் தெளிவாகப் பதிவாகவில்லை என்பதால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும், பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் நகைக்கடையில் இருந்த கைரேகையைப் போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், நெல்லையை அடுத்த அருகன்குளம் மேலூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்ற பழைய குற்றவாளியின் கைரேகை ஒத்துப்போனதால், அவரைப் பிடித்து விசாரணை நடத்திய போலீஸார் அவரை கைது செய்தனர். 

பிடிபட்ட கணேசனிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருடன் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது தொடர்பாகவும் கொள்ளையடித்த நகையை எங்கே பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 2 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை நெல்லை போலீஸார் ஒரு வாரத்தில் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.