வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (31/10/2018)

கடைசி தொடர்பு:17:16 (01/11/2018)

`யுவராஜ் காரில் ஸ்டிக்கர் ஒட்டியதாக ஞாபகம் இல்லை!'- கோகுல்ராஜ் வழக்கில் கெளரிசங்கர் பல்டி

கெளரிசங்கர்

'யுவராஜ் காரில் ஸ்டிக்கர் ஒட்டியதாக ஞாபகம் இல்லை' என்று கோகுல்ராஜ் வழக்கில் ஸ்டிக்கர் கடைக்காரர் கெளரிசங்கர் கூறியுள்ளார்.

ஓமலூர் பட்டியலின பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு, நாமக்கல் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி இளவழகன் விசாரித்துவருகிறார். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதியும், அவருக்கு உதவியாக கோகுல்ராஜ் அம்மா சித்ராவின் வழக்கறிஞர் நாராயணனும், யுவராஜ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜும் வாதாடிவருகிறார்கள். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கோகுல்ராஜின் உடல்,  கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி தண்டவாளத்தில் கண்டறியப்பட்டதற்கு முன்பு, அதாவது 23-ம் தேதி இரவு 8 மணிக்கு சங்ககிரி ரமேஷ் ஸ்டிக்கர் கடையில் யுவராஜ் தன்னுடைய டாடா சஃபாரி காரில் நம்பர் ஸ்டிக்கரை கெளரிசங்கர் ஒட்டியுள்ளார். அவரின் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்த கெளரிசங்கரிடம், அரசு வழக்கறிஞர் கருணாநிதி விசாரணையை மேற்கொண்டார்.  அப்போது கெளரிசங்கர், ''இந்த வழக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இங்கு  இருப்பவர்கள் யாரையும் தெரியாது. நான் ரமேஷ் ஸ்டிக்கர் கடையில் வேலைப்பார்க்கிறேன். நான் ஸ்டிக்கர் ஒட்டவில்லை. எனக்கு  ஞாபகம் இல்லை'' என்றார்.

அதற்கு வழக்கறிஞர் கருணாநிதி, ''ஏற்கெனவே குற்றவியல் நடைமுறைச்சட்டம் வாக்குமூலத்தில், நீதிபதியிடம் 23.6.2015-ம் தேதி யுவராஜ் வெள்ளை நிற சஃபாரி காரில் வந்தார். ஆர்.சி புக் எடுத்து வரவில்லை. டி.என்.30 ஏஎக்ஸ் 6169 நம்பர் ஒட்டச் சொன்னார். நான் ஒட்டினேன். 500 ரூபாய் கொடுத்தார். 180 ரூபாய் எடுத்துக் கொண்டு, 320 மீதி கொடுத்தேன் என்று நீதிபதியிடம் சொல்லி இருக்கிறீங்களே'' என்றதற்கு கெளரிசங்கர், இல்லை என்றார். அப்போது, வாக்குமூல ஆவணத்தைக் காட்டிய அரசு வழக்கறிஞர், இது நீங்கள் போட்ட கையெழுத்துதானே? என்றதற்கு, ஆமாம்  என்றும் பதிலளித்தார்.

இதையடுத்து, யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜா, ''நீங்கள் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்தானே?
கெளரிசங்கர்: ஆமாம்.
கோபால கிருஷ்ண லட்சுமணராஜூ: உங்க பட்டியலினத் தலைவர்களும், போலீஸாரும் பொய் சாட்சி சொல்லச் சொன்னார்களா?
கெளரிசங்கர்: ஆமாம்.

இதுகுறித்து கெளரிசங்கரிடம் கேட்டதற்கு, ''எங்கப்பா, பணிபுரியும் அலுவலகத்துக்கு வாங்க பேசலாம்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க