வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (31/10/2018)

கடைசி தொடர்பு:18:00 (31/10/2018)

`சமயபுரம் மசினியை முகாமுக்கு அனுப்பி சிகிச்சை கொடுங்கள்!'’ - அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி

திருச்சி சமயபுரம் கோயில் மசினி யானையை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்ல உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு மசினி என்ற பெண் யானையை வழங்கினார். யானைப் பாகன் கஜேந்திரன் கண்காணிப்பில் மசினி பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மே 25-ல் மசினினுக்கு மதம் பிடிக்கவே, கோயிலுக்குள் வைத்து யானைப் பாகன் கஜேந்திரனை திடீரென தூக்கி வீசி மிதித்துக் கொன்றது. மேலும் 9-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மசினிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. தொடர்ந்து தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை ஆராய்ச்சி கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பட்டது. இந்தநிலையில், சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளமெண்ட் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மசினி யானை தொடர்பாக ஒரு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். 

அதில், ``வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி அட்டவணை 1-ல் பாதுகாக்கப்பட்ட வன உயிரினமாக யானை வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், யானைகளைத் துன்புறுத்துதலிலிருந்து பாதுகாப்பதற்காகச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. எனவே, தஞ்சாவூர் ஒரத்தநாடு கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் உள்ள சமயபுரம் கோயில் யானையை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சேர்க்க வேண்டும். யானைகளை அதன் இருப்பிடமான வனப் பகுதிகளிலிருந்து கோயில் உள்ளிட்ட பிற்பகுதிகளுக்குக் கொண்டு செல்லக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், ``மசினி யானையை அதன் பிறப்பிடமான முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று யானைக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும். முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் 24 மணி நேரமும் கால்நடை மருத்துவர் பணியில் இருக்க வேண்டும். மேலும், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வாரம் ஒருமுறை மசினி யானையைக் கண்காணிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பான அறிக்கையை டிசம்பர் 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.