`கொலையாளிக்கு தண்டனை பெற்றுத்தருவேன்!' - ராஜலட்சுமி தாயாருக்கு கலெக்டர் ஆறுதல் | Man who killed Rajalakshmi will get punishment, says collector

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (31/10/2018)

கடைசி தொடர்பு:17:40 (31/10/2018)

`கொலையாளிக்கு தண்டனை பெற்றுத்தருவேன்!' - ராஜலட்சுமி தாயாருக்கு கலெக்டர் ஆறுதல்

ராஜலட்சுமி தாயாருக்கு கலெக்டர் ரோஹிணி ஆறுதல்

ஆத்தூரை அடுத்த தளவாய்ப்பட்டி சுந்தரபுரம் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி  ராஜலட்சுமி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டந்துக்கு, ராஜலட்சுமியின் குடும்பத்தினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச்செயலாளர் சிவஞானம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா, இந்திய ஜனநாய வாலிபர் சங்க மாநில தலைவர் செந்தில் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இதில் பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா, ''இது மிகக் கொடூரமான கொலை. சாதிய ஆதிக்க மனோபாவம், பாலியல் வெறியோடு கொலைசெய்துள்ளான். அவன் மீண்டும் வெளியே வர முடியாத அளவுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் உடனே செய்ய வேண்டும். சேலம் மாவட்ட கலெக்டர் ஸ்கூலுக்கு சென்று பாடம் நடத்துறாங்க. வீதி கூட்டுறாங்க. இப்படி ஒரு கொடூர கொலை நடந்துள்ளது. அந்தக் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் சொல்ல மனமில்லை'' என்றார்.

அதையடுத்து, ராஜலட்சுமி குடும்பத்தினர் சேலம் கலெக்டர் ரோஹிணியைச் சந்தித்தார்கள். ராஜலட்சுமியின் தாயாரை கட்டிப்பிடித்து அழுத கலெக்டர், ''சம்பவம் நடந்த உடனே வீட்டுக்கே வந்து ஆறுதல் சொல்ல நினைத்தேன். அந்த நேரத்தில் உங்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாது என்று வரவில்லை. அடுத்த நாள் உங்க வீட்டுக்கு வர புறப்பட்டேன். நீங்க மதுரை சென்றுவிட்டதாகத் தெரிவித்தார்கள். உங்க மகளைக் கொன்ற அந்தக் கொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தருகிறேன்'' என்றார்.

ராஜலட்சுமியின் பெற்றோரை சந்திப்பதற்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த சேலம் கலெக்டர் ரோஹிணி, ''ராஜலட்சுமியை கொடூரமாகக் கொலைசெய்த கொலையாளிமீது குண்டர் தடுப்புச் சட்டம் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. விரைவில் குண்டாஸ் போடப்படும்'' என்றார்.