வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (31/10/2018)

கடைசி தொடர்பு:18:50 (31/10/2018)

`அவள் உடலை ஆத்துல வீசிட்டு சென்னை வந்துட்டேன்’ - அதிரவைத்த ஆட்டோ டிரைவர்

`கஸ்தூரியோடு இருந்தபோது அவளுக்குத் திடீர்னு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துட்டா... அடுத்து அவள் உடலை சாக்குமூட்டையில் கட்டி ஆத்துல வீசிவிட்டு சென்னை வந்துவிட்டேன்' எனப் போலீஸாரை அதிரவைத்துள்ளார் ஆட்டோ டிரைவர் ஒருவர். 
 
கஸ்தூரி
புதுக்கோட்டை மாவட்டம் அதிரான்விடுதியைச் சேர்ந்தவர் நாகராஜன், லோடு ஆட்டோ டிரைவர் இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காமராஜர் சிலை அருகே மருந்துக்கடையில் வேலை பார்த்து வந்த, கீரமங்கலம் அடுத்த குலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சித்திரவேல் என்பவரின் 19 வயது மகளான கஸ்தூரி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
 
இந்நிலையில் கடந்த 28-ம் தேதி காலை வேலைக்குச் சென்ற கஸ்தூரி வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கஸ்தூரியின் பெற்றோர் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதுவரை கஸ்தூரியின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் கஸ்தூரிக்கு ஆட்டோ டிரைவர் நாகராஜ் என்பவருடன் பழக்கம் இருப்பது தெரியாது.
 
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது டிரைவர் நாகராஜனுக்கும் கஸ்தூரிக்கும் பழக்கம் ஏற்பட்டு சம்பவத்தன்று இருவரும் ஆலங்குடியிலிருந்து ஒன்றாகச் சென்றது தெரியவந்தது.
 
இதை அடுத்து போலீஸார், காணாமல்போன கஸ்தூரி குறித்து விசாரணை நடத்துவதற்காக நாகராஜனின் சொந்த ஊரான அதிரான்விடுதி கிராமத்துக்குச் சென்றபோது அவர் ஊரில் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாரின் விசாரணையில் நாகராஜ் சென்னையில் பதுங்கியிருப்பது தெரிய வர, சென்னை விரைந்த தனிப்படை போலீஸார் நாகராஜை கைது செய்தனர்.
 
ஆட்டோ டிரைவர் நாகராஜ்நாகராஜன் போலீஸார் நடத்திய விசாரணையில், எனக்கும் கஸ்தூரிக்கும் பழக்கம் இருந்தது உண்மைதான். அன்றைய தினம் கஸ்தூரியை அழைத்துக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்துக்குச் சென்றேன். அப்போது கஸ்தூரிக்குத் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிவிட்டார். அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிப் பார்த்தேன். நெஞ்சு வலியின் காரணமாக கஸ்தூரி இறந்துவிட்டது தெரிந்தது. அதையடுத்து என்ன செய்வது என்று யோசிக்கையில், நான் லோடு ஆட்டோ டிரைவர் என்பதால், கஸ்தூரியின் உடலை சாக்குப்பையில் கட்டி எனது ஆட்டோவில் ஏற்றி தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் பகுதியிலுள்ள ஆற்றில் வீசிவிட்டு, என் மீது சந்தேகம் வராமல் இருக்கச் சென்னை வந்துவிட்டதாகக் கூற போலீஸார் அதிர்ந்துபோனார்கள் .
 
கஸ்தூரியின் மரணம் குறித்து தகவல் அறிந்த அவரின் உறவினர்கள் பெற்றோர் புதுக்கோட்டை ஆலங்குடி, பெரியலூர், கைகாட்டி, பனங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
கஸ்தூரியின் குடும்பத்தார், `கஸ்தூரி காணாமல் போனது குறித்து புகார் கொடுத்ததில் இருந்தே போலீஸார் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும், தற்போது நாகராஜன் என்பவரை மட்டும் குற்றவாளியாகக் காண்பிப்பதாகவும் குற்றம் சாட்டுவதுடன், கஸ்தூரியைத் தனிநபராக கொலை செய்து மூட்டையில் கட்டிக்கொண்டு சென்று மல்லிப்பட்டினம் ஆற்றில் விட்டு வர வாய்ப்பு இல்லை. ஆகவே, நடந்த சம்பவத்தை முழுமையாக விசாரித்து கஸ்தூரியின் மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகள் அனைவரையும் கண்டுபிடிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
 
கஸ்தூரி மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடும் அவரின் உறவினர்களிடம், புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். கஸ்தூரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸார் பல இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, கிராம இளைஞர்கள் கஸ்தூரியின் படுகொலைக்கு நீதிவேண்டி சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இளம்பெண் கஸ்தூரி மரணத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலையிலிருந்து பரபரப்பு நிலவுகிறது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க