வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (31/10/2018)

கடைசி தொடர்பு:18:33 (31/10/2018)

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ஆறுமுகசாமி! - தீபாவளிக்குப் பிறகு விசாரணை

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை நடத்திவரும், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்,  இன்று வீடு திரும்பினார்.

ஆறுமுகசாமி ஆணையம்


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணத்தில் பல்வேறு குழப்பங்கள் நீடித்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இது தொடர்பாக விசாரணை நடத்த, கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அரசு அமைத்தது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலசா மஹாலில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

ஆறுமுகசாமி

 

இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதேபோல, ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த, அப்போலோ மருத்துவமனையிலும், ஆணையம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. மேலும், ஆணையத்துக்கு 3 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துமனையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இன்று அவர் வீடு திரும்பியுள்ளார். அவருக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏற்கெனவே, 4,5,6,7 ஆகிய நாள்கள் விசாரணை ஆணையம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை 12-ம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிகிறது.