வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (31/10/2018)

கடைசி தொடர்பு:18:15 (31/10/2018)

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனங்களைத் தவிர்க்க ஹைகோர்ட் புது யோசனை!

'கோயில் திருவிழாக்களில் நடைபெறும் கலாசார நிகழ்ச்சிகளை வீடியோ கேமரா மூலம் படம் பிடிக்க வேண்டும்; அதில், ஆபாசம் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்


கோயில் திருவிழாவின்போது, கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் ஆபாச நடனங்கள் நடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இதுபோன்ற நடனங்களை கோயில் திருவிழாக்களின்போது நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து கோயில் நிர்வாகத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதில், கோயில்களில் கலாசார நிகழ்ச்சி என்ற பெயரில் நடன நிகழ்ச்சிகள் காலங்காலமாக நடத்தப்படுகிறது. ஆனால், ஆபாச நடனம்  என்று கூறி, காவல் துறை அனுமதி வழங்க மறுப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த வழக்குகள் நீதிபதி எம்.மகாதேவன் முன்பு  விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, `திருவிழா என்றால் வில்லுப்பாட்டு, கிராமியப் பாட்டு  நிகழ்ச்சிகள் எல்லாம்  நடந்தன. இப்போது அறிவியல் முன்னேற்றம் அடைந்ததால், இதுபோன்ற பல நடனங்கள்  எல்லாம் கோயில் திருவிழாக்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, கோயில் திருவிழாவை முன்னிட்டு, கலாசார நடனம் என்ற நிகழ்ச்சி நடந்ததால், அதை உள்ளூர் காவல் துறை வீடியோ கேமரா மூலம் படம்பிடிக்க வேண்டும். அதில் ஆபாசம் இருந்தால், சட்டப்படி வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எல்லா காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும், தமிழக டிஜிபி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளார்.  வழக்கு விசாரணையை வருகிற நவம்பர்  2-ந்தேதிக்கு ஒத்திவைத்தார் .