வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (31/10/2018)

கடைசி தொடர்பு:20:30 (31/10/2018)

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் அமைச்சர் கே.சி.கருப்பணன் திடீர் ஆய்வு!  

 

 அமைச்சர் கே சி கருப்பணன்

தமிழகத்தில் உள்ள 3 சதுப்பு நிலங்களில் முக்கியமான ஒன்றாகப் பள்ளிக்கரணை இருக்கிறது. நான்கு மாதங்கள் தண்ணீர் நிறைந்தும், எட்டு மாதங்கள் வறண்ட நிலையிலும் இருக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைத் தேடி வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. 
சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அதைத் தாங்கி, தேக்கி வைத்து கடலுக்கு அனுப்பும் இயற்கைச் சூழலை தன்னகத்தே கொண்டிருக்கிறது பள்ளிக்கரணை சதுப்பு நிலம். 5,000 ஹெக்டேர் பரப்பளவில் பரந்த அளவில் இருந்த இந்தச் சதுப்பு நிலம் கொஞ்சம் கொஞ்சமாக அரசு திட்டங்களுக்காக எடுக்கப்பட்டும், வீட்டு மனைகளாக மாற்றப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் வந்தது. இதன் விளைவாக இன்றைக்கு இதன் பரப்பளவு பத்தில் ஒரு பகுதியாக 500 ஹெக்டேர் அளவுக்குச் சுருங்கிவிட்டது. 

இந்நிலையில் சென்னையின் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் இன்று திடீரென ஆய்வு செய்தார். அரசு அதிகாரிகள் பலருடனும் நடந்த ஆய்வு முடிந்து பேசுகையில், ``20 கோடி ரூபாய் அளவில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் மேம்படுத்தப்படும், அதற்கான முயற்சிகளைக் கண்டிப்பாக எடுப்போம்" என்றார்.

பட்டாசு வெடிப்பது குறித்தான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கருத்து கூற முடியாது. மேலும் பட்டாசு வெடிப்பதை இரவு 7 மணி முதல் 9 மணியாக மாற்ற அரசு பரீசிலனை செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். அதிக புகையை ஏற்படுத்தக்கூடிய பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை மேம்படுத்த வேண்டும் எனப் பல இயற்கைநல விரும்பிகளும் முன்பிருந்தே சொல்லிவரும் நிலையில் இந்த அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியது.