வெளியிடப்பட்ட நேரம்: 18:26 (31/10/2018)

கடைசி தொடர்பு:18:26 (31/10/2018)

ஒரு பாட்டி... ஒரு பைக்... சபாஷ் பட்டுக்கோட்டை பசங்களா!

பட்டுக்கோட்டையில், குளத்தில் தவறிவிழுந்த 80 வயது மூதாட்டியை, நொடிகூட யோசிக்காமல் சினிமாவில் வருவதுபோல உடனடியாக டூ விலரில் துாக்கிக்கொண்டு மருத்துவனைக்குச் சென்று சிகிச்சை அளிக்க வைத்தனர் இளைஞர்கள் நான்கு பேர். இதையடுத்து, அந்த மூதாட்டி உயிர் பிழைக்க, அந்த இளைஞர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது சிலர், மனிதநேயம் இன்னும் செத்துப்போகவில்லை, ஈர மனம் படைத்த மனிதர்களால் உயிரோடுதான் இருக்கிறது' என நெகிழ்ச்சியோடு பேசிச் சென்றனர். 

பட்டுக்கோட்டை காசாங்குளம் எதிரே உள்ள சிவன் கோயில் வாசலில், 80 வயதுடைய சின்னப் பொண்ணு என்ற மூதாட்டி எப்போதும் அமர்ந்திருப்பார். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் காசை வைத்து பிழைப்பு நடத்திவந்தார். இந்த நிலையில் இன்று, சின்னப் பொண்ணு சாப்பிட்டுவிட்டு கை கழுவ எதிரே உள்ள குளத்துக்குச் சென்றார். அப்போது  நிலைதடுமாறி  குளத்துக்குள் விழுந்தவர் தத்தளித்தபடியே மெள்ள ஆழமான நடுப்பகுதிக்கு இழுத்துச்செல்லப்பட்டார். அதன்பிறகு, சின்னப்பொண்ணு எந்த அசைவும் இல்லாமல் அப்படியே மிதந்துகொண்டிருந்தார். அவர்  உயிரிழந்துவிட்டதாக நினைத்த அப்பகுதி மக்கள், சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக வேடிக்கைபார்த்துக்கொண்டும் செல்போனில் படம் பிடிப்பதுமாகவும் குளத்தைச் சுற்றி நின்றுள்ளனர். அப்போது, இளைஞர்கள் சிலர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல்கொடுத்தனர்.

அவர்கள், உயிர் போய்விட்டது என நினைத்தே மூதாட்டியை மீட்டு கரைக்குக்கொண்டுவந்தனர். கூட்டத்தில் இருந்த டாக்டர் ஒருவர், மீட்கப்பட்ட மூதாட்டியை  நாடி பிடித்துச் சோதனைசெய்ததில்,மூதாட்டிக்கு உயிர் இருப்பதாகக் கூறியதோடு 'உடனடியாக மருத்துவமனைக்குக்  கொண்டுசென்றால் காப்பாற்றிவிடலாம்' எனக் கூற, அந்த இடத்தில் இருந்த அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. இதையடுத்து அந்த இளைஞர்கள், மூதாட்டியைக் கொண்டுசெல்ல ஆட்டோவை அழைத்துள்ளனர். ஆனால், அவர்கள் வர மறுத்துவிட்டனர். ஆம்புலன்ஸ் வருவதற்கும் தாமதமானது. உடனே நொடிகூட தாமதிக்காமல், சினிமாவில் வருவதுபோல இளைஞர்களான விக்கி, சிவா, சிவனேசன், அன்பு ஆகியோர், மூதாட்டியை டூ வீலரில் அழைத்துக்கொண்டு செல்ல முடிவெடுத்தனர். ஒருவர் வண்டி ஓட்ட  மயக்க நிலையில் இருந்த மூதாட்டியை நடுவில் படுக்க வைத்துக்கொண்டு பின்னால் ஒருவர் பிடித்துக்கொள்ள, படு வேகமாக வண்டியை ஓட்டிச்சென்றனர். மற்றொரு வண்டியில் வந்த மற்ற இரண்டு பேரும், டிராஃபிக் ஏதும் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டனர்.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அரசு மருத்துவமனைக்கு, சில மணித் துளிகளில் விரைந்துசென்றனர். மருத்துவமனை முகப்பிலேயே வண்டியை நிறுத்தாமல், சிகிச்சை அளிக்கும் வார்டுக்குள்ளேயே வண்டி சென்றது. பின்னர், உடனடியாக சிகிச்சை அளித்த டாக்டர்கள், மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றினர். மூதாட்டி உயிர் பிழைக்கக் காரணமாக இருந்த  இளைஞர்கள்  நான்கு பேரையும் அப்பகுதி மக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது சிலர், மனிதநேயம் இன்னும் செத்துப்போகவில்லை,  ஈர மனம் படைத்த மனிதர்களால் உயிரோடுதான் இருக்கிறது எனப் பேசிக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இளைஞர்களோ, ``கண்ணுக்கு நேரா ஓர் உயிர் தவிக்கிறப்ப எப்படிப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியும். அதான் யோசிக்காம மூதாட்டியைத் தூக்கிச்சென்று காப்பாற்றினோம். அவர் பிழைத்த பிறகே எங்க மனசு நிம்மதியா இருக்கு’' என்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க