வெளியிடப்பட்ட நேரம்: 19:37 (31/10/2018)

கடைசி தொடர்பு:20:04 (31/10/2018)

நாடோடி சமூகத்திலிருந்து ஒரு குரல்! - ஐ.நா விருதுக்கு தேர்வான சக்தி எப்படி இருக்கிறார்?

``கூட படிக்கிற பசங்களும் என்னை நல்லா அரவணைச்சுக்கிறாங்க. யாரும் என்னை ஒதுக்கி வைக்கிறதில்லே. நான் நல்லா படிச்சு வேலைக்குப் போய், அப்பா, அம்மாவுக்கு வயிறார கஞ்சி ஊத்துவேன்.''

சிறுவன் சக்தி

ஹாய் அண்ணா, எப்படி இருக்கீங்க” என உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் சக்தி. ஓராண்டுக்கு முன்பு கேட்ட அந்தக் குரல், கொஞ்சம் முதிர்ச்சி அடைந்திருக்கிறது. உச்சரிப்பில் அத்தனை தேர்ச்சி. ஆம், அப்போது சக்திக்குத் தெளிவாகத் தமிழ் பேச வராது. நாடோடி இனத்தவர் பேசும் பாஷை கலந்திருக்கும்.

சக்தி, நாடோடி இனத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன். தன் அப்பா அம்மாவுடன் ஊசி, பாசிமணி விற்றுவந்தவர். படிப்பின்மீது தீராத காதல்கொண்ட சக்திக்குப் பள்ளிக்குப் போவதே கனவு. அந்தக் கனவின் தேடல் கடந்த வருடம் 'ஹேண்டு இன் ஹேண்டு' அமைப்பின் மூலமாக, காஞ்சிபுரம் தியாகி நிதி நாடும் பள்ளிக்குள் முதன்முறையாகக் கால் பதிக்கவைத்திருக்கிறது. தான் மட்டுமன்றி, தன் நாடோடி இனத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பள்ளிக்கு வரவழைத்ததின் காரணமாக, 'சர்வதேசக் குழந்தைகள் அமைதிக்கான ஐ.நா விருது'க்குத் தேர்வானவர். ஓராண்டுக்குப் பின் சக்தி எப்படி இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள அவர் ஆசிரியரின் தொலைபேசி மூலம் சக்தியிடம் பேசினோம்.

சக்தி

“அண்ணா, நான் இப்போ தமிழ் வகுப்பில் இருக்கேன். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் போன மாசம் பெங்களுர் போயிருந்தேன். Ashoka Youth Venture என்கிற அமைப்பு அழைச்சுட்டுப் போனாங்க. ஒரு விஷயத்தை எப்படி புதுசா பண்ணனும், தலைமைப் பண்பை எப்படி வளத்துக்கணும், எல்லாருடனும் எப்படி பழகணும்னு அங்கே நிறைய சொல்லித் தந்தாங்க. அவங்களே பஸ்ல டிக்கெட் போட்டு அழைச்சுட்டுப் போயிடறாங்க. திரும்பவும் இன்னிக்கு நைட்டு கிளம்பறேன். ரெண்டு நாள் அங்கேதான் வகுப்பு நடக்கும். மாசா மாசம் வரச்சொல்லியிருக்காங்க அண்ணா. என் அப்பாகிட்டயும் அம்மாகிட்டயும் பெங்களுருக்குப் போயிட்டு வந்ததைச் சொன்னப்போ, ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. 

அப்புறம், அடிக்கடி என்னை அழைச்சுட்டுப்போய் மேடையேற்றி பேசச் சொல்றாங்க. விருது கொடுக்கறாங்க. கூட படிக்கிற பசங்களும் என்னை நல்லா அரவணைச்சுக்கிறாங்க. யாரும் என்னை ஒதுக்கி வைக்கிறதில்லே. நான் நல்லா படிச்சு வேலைக்குப் போய், அப்பா, அம்மாவுக்கு வயிறார கஞ்சி ஊத்துவேன். சரிண்ணா நான் வெச்சிடவா. சாயந்திரம் ஹாஸ்டலுக்குப் போயிட்டுப் பேசறேன்” என்கிறார் சக்தி. 

பெற்றோருடன் சேர்ந்து ஊசி, பாசிமணி விற்றும், நடைபாதையில் உறங்கியும் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்த சக்தி, தனக்கான பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டார். இனி சக்தியின் மூலமாக அவன் சமூகத்து குழந்தைகளுக்கும் புது வெளிச்சம் பரவ வேண்டும். நிச்சயம் பரவும்!